Breaking News

இலங்கை அணி தோல்வி!


சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் செஞ்சுரியன் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின், முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

பாக்சிங் டே போட்டியாக கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்போட்டி இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்திருந்தது.

அதற்கமைய தனது முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக ஆகக் கூடுதலாக தினேஷ் சந்திமால் 85 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களையும் (காயமடைந்து வெளியேற்றம்) தசுன் சானக்க 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில், தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய லூத்தோ சிபம்லா 4 விக்கெட்டுகளையும், வியான் முல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி சிறப்பாக விளையாடி தனது முதல் இனிங்ஸிற்காக 621 ஓட்டங்களை சகல விக்கெட்டுக்களையும் இழந்து பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டுப்லஸ்ஸிஸ் 199 ஓட்டங்களை பெற்றதோடு, டீன் எல்கர் 95 ஓட்டங்களையும், கேஷவ் மஹராஜ் 73 ஓட்டங்களையும், டெம்பா பவுமா 71 ஓட்டங்களையும், எய்டன் மார்கிரம் 68 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில், தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய வணிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், விஷ்வ பெனாண்டோ 3 விக்கெட்டுகளையும், தசுன் சானக்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

225 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 64 ஓட்டங்களையும் வழங்க 59 ஓட்டங்களும் அதற்கு அடுத்தபடியாக தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 10 ஓட்டங்களையும் பெற்றதோடு, ஏனைய அணி வீரர்கள் 10 இற்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் லுங்கி கிடி, அன்ரிச் நோர்ட்ஜ், லூத்தோ சிபம்லா, வியான் முல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அந்த வகையில் தென்னாபிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 மணி என தென் ஆபிரிக்க அணி முன்னிலை வகிக்கின்றது.

போட்டியின் நாயகனாக டுப்லஸ்ஸிஸ் தெரிவானார்.

- தினகரன் - 

No comments