என்றும் உறவுகளோடு வாழப் பழகுவோம்!
அன்புத் தந்தை, பாசமிகு தாய்...
உயிருக்குயிரான சகோதர சகோதரிகள்...
உம்மா...
வாப்பா...நாநா... தாத்தா...
தம்பி... தங்கச்சி என்ற பாசம் கலந்த வார்த்தைகள்; உறவுகள்.
எல்லோரும் ஒரே இடத்தில் சாப்பாடு...
ஒரே வீட்டில் தூக்கம்...
சந்தோஷம், நிம்மதி, பாசம், விட்டுக்கொடுப்பு
என எதற்கும் குறைவில்லாத அழகான குடும்பம்.
ஆனால் பல குடும்பங்களுக்குள் ஷைதான் நுழைந்து அழகான கூட்டை உடைத்து சீர்குலைத்தும் விடுகின்றான்.
பிள்ளைகளின் திருமணத்துடன் பல குடும்பங்கள் சிதறி விடுகின்றன.
அன்பு காணாமல் போய் விடுகின்றது.
பொறுமையும் விட்டுக் கொடுப்பும் குழி தோண்டி புதைக்கப்படுகின்றன...
அன்பு காட்டிய தந்தையும் பாசத்துடன் நடந்த தாயும் ஆகாதவர்களாக மாறி விடுகின்றனர்.
உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் எதிரிகளாகத் தெரிகின்றனர்...
எடுத்ததற்கெல்லாம் பிரச்சினை...
தொட்டாலும் பிரச்சினை, விட்டாலும் பிரச்சினை...
போட்டி, பொறாமை, பெருமை என்பன குடிகொண்டு விடுகின்றன.
சில இடங்களில் தாய்க்கும் தகப்பனுக்கும் இடையில் தொடர்பில்லை...
தொடர்பாக இருந்தாலும் சில பிள்ளைகளை விட்டுவிட்டு சில பிள்ளைகளுடன் ஒட்டி வாழ்கின்றனர்.
சில இடங்களில் பிள்ளைகள் சிதறுண்டு கிடக்கின்றனர்.
தம் தாய், தந்தை, சகோதர சகோதரிகளுடன் பேசி, உறவாடி பல வருடங்கள்.
இதனால் கிடைத்த லாபம்!!
தமது இரத்த உறவை விட நட்பும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவும் பலருக்கு முக்கியமாகிய கொடுமையான நிலை...
ஒவ்வொரு சகோதரனும் சகோதரியும் தமது கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஒதுங்கி விடுகின்றனர்.
தன் தாயை, தந்தையை , சகோதர சகோதரிகளை
கவனிக்க நேரமுமில்லை; விருப்பமுமில்லை...
சின்னச் சின்ன காரணங்கள்..
காணிச் சண்டை...வயல் சண்டை... அல்லது வழிச் சண்டை .. பிள்ளைச் சண்டை இப்படி அற்ப விடயங்கள்.
இதற்குக் காரணம் அவர்களது இயல்பு குணங்களா? அல்லது அவர்களை மணந்து கொண்ட கணவன்; மனைவியினது குணங்களா?
அல்லது தாயினதும் தந்தையினதும் நீதியற்ற சொத்துப் பிரிப்பும், பாகுபாடு காட்டும் குணமுமா?
எது எவ்வாறு இருப்பினும் எல்லோரும் நீதி தவறாது நடந்து கொள்ள வேண்டும்.
உறவுகளை துண்டித்து சந்தோஷமாக வாழ்வதில் என்ன லாபம்?
உறவைத் துண்டிப்பதால் அல்லாஹ்வின் அருளும் கிடைக்கப் போவதில்லை.
பரகத்தும் கிடைக்கப்போவதில்லை.
அல்லாஹ் அவனுடனான தன் தொடர்பையும் துண்டித்து விடுகின்றான்...
நபி மொழிகள் சில:
“யார் தனக்கு ரிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவரது இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்" நூல்:புகாரி
" உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான்" நூல்: புகாரி
"இரத்த உறவு அர்ஷில் கொழுகப்பட்டுள்ளது. அது: "யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்” எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நூல்: புகாரி
குறிப்பு: அல்லாஹ் அருள் செய்த குடும்பங்கள் என்றும் சந்தோஷமாக இருக்கும். அப்படியான குடும்பங்களும் இருக்கின்றன. அக்குடும்பங்களுக்கு அல்லாஹ் மேலும் அருள்புரிவானாக.







No comments