Breaking News

திருமலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு.

யுத்தத்தால் பாதிக்கப்பட் 122 நபர்களுக்கும் மற்றும் மதஸ்தலங்கள்   7க்கும்  9.6 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கிவைக்கப்பட்டது.

(கியாஸ் ஷாபி) 

நாட்டில் நிலவிய 30 வருடகால யுத்தத்தின் காரணமாக பல்வேறு வகையான பாதிப்புக்களுக்கு உட்படுத்தப்பட்ட பொதுமக்கள் மற்றும் மதஸ்த்தலங்களுக்கான நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரலவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உட்பட்ட 122 நபர்களுக்கும் மற்றும் மதஸ்தலங்கள்   7க்கும்  9.6 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக இந்நாட்டில் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்பட்டது. இன்றைய அரசாங்கம் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈடுகளை வழங்கி வைப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள ஏதுவாக அமையும் என்று இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

covid-19 வைரஸுக்கு மத்தியில் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை முகங்கொடுக்கும்  இந்த சந்தர்ப்பத்தில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை  மேம்படுத்த அவசியமான நடவடிக்கைகளை   மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயம் மீன்பிடி உட்பட ஜீவனோபாய விடயங்களை மேம்படுத்துவதற்கு அவசியமான உதவிகளை அரசாங்கம் வழங்க தயாராக இருப்பதாகவும் மாவட்ட மட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக எமது நாடு பொருளாதார ரீதியாக ஏனைய நாடுகளிலும் பார்க்க பின்தங்கிய நிலைக்கு  சென்றதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றுபட்டு வலுவான தேசம் ஒன்றை கட்டி எழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படல் காலத்தின் தேவையாக காணப்படுகின்றது. யுத்தத்தின் காரணமாக சுதந்திரமாக வாழ முடியாமல் போனது. பல்வேறுவகையான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அச்சத்துடன் வெளியில் செல்லக் கூடிய ஒரு நிலவரம் காணப்பட்டது . ஆனால் இன்று அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. பயமின்றி தங்களுடைய தொழில்துறைகளை செய்யக்கூடிய நிலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலவரத்தை ஏற்படுத்திய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் காணப்படுகின்றார். இன்று இலங்கை திருநாட்டை ஒரு வலுவான தேசமாக மாற்றி அமைக்கும் நோக்கில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் செயற்பட்டு வருகின்றார்.

எனவே, அழகிய வலுவான தேசம் ஒன்றை கட்டி எழுப்புகின்ற முயற்சியில் நாமும் பங்குதாரர்களாக மாற வேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது.  சில அரசியல் கட்சிகள் மக்களை திசை திருப்ப முற்படுகின்றார்கள்.  எனவே மக்கள் அந்த வலைக்குள் சிக்காமல் எமது எதிர்கால பரம்பரை முன்னர் நாம் அனுபவித்தது போன்ற அந்தத் துன்பங்களை அனுபவிக்காமல் அவர்கள் சிறந்த  தலைவர்களாக வருவதற்குரிய அத்திவாரத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இதன்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோரல தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன் உட்பட பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.



No comments