பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பில் நினைவஞ்சலி
சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பில் நினைவஞ்சலி
ஏப்பிரல் 21 உயிர்த ஞாயிறு குண்டுதாக்குலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (21) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் இடம்பெற்றது.
சியோன் தேவாலயத்தின் புனரமைப்பு வேலைகள் முடிவடையாத நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று ஜெப ஆராதனை வழிபாடுகள் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் உட்பட்ட 31 பேரின் பெயர்கள் தனித்தனியாக உச்சரிக்கப்பட்டு அஞ்சலி பிரார்த்தனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் விசேட ஆராதனைகளில் 300 இற்கு மேற்பட்ட இறைவிசுவாசிகள், போதகர்கள் மற்றும் துறவிகள் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்பின் மத்தியில் வழியாடுகளில் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை மாவட்டத்தில் பல்வேறுபட்ட பகுதிகளில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றிருந்தன.
அதனடிப்படையில் காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மாநகர சபையினால் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மட்டு மாநகரசபை ஆணையாளர் மா.தயாபரன் மற்றும் மாநகர மேயர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் சீயோன் தேவாலயத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர், சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர், கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சந்ரு உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுதாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 70 மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் இந்த குண்டுதாக்குதல் இடம்பெற்று இன்று இரண்டும் ஆண்டு நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.










No comments