குறிஞ்சாக்கேணி பாலத்தின் தற்காலிக படகு சேவையை இலவசமாக வழங்க வேண்டும்!!!
குறிஞ்சாக்கேணி பாலத்தின் தற்காலிக படகு சேவையை இலவசமாக வழங்க வேண்டும். மக்கள் கோரிக்கை
கிண்ணியா நகர சபையையும் கிண்ணியா பிரதேச சபையையும் இணைக்கும் குறிஞ்சாக்கேணி பாலம் முழுமையாக உடைக்கப்பட்டு, தற்போது புதிதாக பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மக்கள் போக்குவரத்துக்காக தற்காலிக பயண ஏற்பாடாக இழுவை படகு சேவை நேற்று தனியார் ஒருவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பயணக்கட்டணமாக ஒருவருக்கு 20 ரூபா அறவிடப்படுகின்றது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒரு பயணி பல முறை இதனூடாக பயணம் செய்ய வேண்டி ஏற்பட்டால் இப்பயணத்திற்காக பல நூறு ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலேயே மிக நீளமான கிண்ணியா பாலம் கட்டுவதற்கு முன்பாக இயந்திர பாதை மூலமே அப் பெரும் கடலை கடந்து மக்கள் பயணம் செய்தனர். இதற்காக எந்தவொரு பணமும் பயணிகளிடமிருந்து அறவிடப்படவில்லை. ஆனால் இந்த இழுவைப் படகுக்கு கட்டணம் அறவிடுவது எந்த வகையிலும் நியாயமாகாது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அப்பாவி பொது மக்களின் பணத்தை உறிஞ்சு குடிக்கும் நிலை ஏற்பட்டிருக்றது என
தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர்
முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
இந்த பாலம் கட்டி முடியும் வரை தனியார் இழுவை பாதைக்கு கட்டணமாக பாதசாரிகள் கொடுக்க வேண்டிய கூலி 46 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும் இவை பொது மக்களின் பணத்தை சூரையாடும் திட்டம் என்றும் தெரிவித்த அவர், அரசியல் தலைவர்களின் திட்டமிடல் இல்லாத செயற்பாட்டின் வெளிப்பாடு இதன் மூலம் தெளிவாகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு பாதையோ பாலமோ திருத்தவேலை நடக்கின்றபோது அதற்குப்பதிலாக தற்காலிக போக்குவரத்து வசதி அமைத்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையே
பயணிகளிடம் கட்டணம் அறவிடாது இலவச சேவை வழங்க வேண்டும். அல்லது கிண்ணியா பிரதேச சபையும், நகரசபையும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






No comments