திருகோணமலை கோட்டை கல்வெட்டு
இன்றைக்கு 380 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை கோட்டை 01.05.1639 அன்று ஒல்லாந்தரால் தாக்கப்பட்டது.
கண்டியரசன் இரண்டாம் இராஜசிங்கன் உடன் போர்த்துக்கேயருக்கு எதிராக ஒல்லாந்தர் செய்துகொண்ட உடன்படிக்கையை தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றது.
ஒல்லாந்துப் படை 12 கப்பல்கள் கொண்ட கடற்படையுடன் கோட்டையை முற்றுகையிட்டது.
இவர்களுக்கு உதவியாக கிழக்கிலங்கையில் இருந்த தமிழ் சிற்றரசுகளான வன்னிபங்களின் படைப்பிரிவுகளும் போரில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் இருந்து 500 படையினர் கொட்டியாரத்திலிருந்து 400 படையினர் மற்றும் பணியாளர்கள் சம்மாந்துறைப் படையணி என்பன இத்தாக்குதலில் பங்குபற்றின. இக்காலப்பகுதியில் திருகோணமலை கோட்டையில் போத்துக்கீசர் சார்பில் 40 ஐரோப்பிய வீரர்களும் 100 சுதேச படைச்சிப்பாய்களும் இருந்தார்கள். கோட்டையில் மூன்று பீரங்கித் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
02.05.1639 அன்று திருகோணமலை கோட்டை ஒல்லாந்தரினால் கைப்பற்றப்பட்டது.
இந்த வெற்றியைப் பதிவு செய்யும் முகமாக ஒல்லாந்தருக்கு ஆதரவு வழங்கிய வன்னி பிரிவுகளின் தலைமை அதிகாரியால் திருகோணமலை கோட்டை வாயிலில் கல்வெட்டு உருவாக்கப்பட்டதாக பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
இந்தக் கல்வெட்டின் சிதைந்த எழுத்துக்களை இன்றும் நீங்கள் திருகோணமலைக் கோட்டை வாயிலின் வலது பக்கத்தில் பாண்டியரால் அமைக்கப்பட்ட இரண்டு மீன் சின்னங்களுக்கு கிழே காணக்கூடியதாக இருக்கும்.
(மு)ன்னே குள
(க்)கோட்டன் மூட்டு
(தி)ருப்பணியை(ப்)
பின்னே பறங்கி (பி)
(ரிக்)கவே மன்ன(வ)
( பி)ன் பொண்ணா(த)
(தனா )ன யியற் (ற)
(ழித்)தே வைத்து
(எண்)ணா(ர் வரு)
(வேந்தர்)கள்
தங்களுடைய காலத்தில் மிகச் சிறப்புடன் விளங்கிய திருக்கோணேச்சரம் தரைமட்டமாகி இருப்பதையும் அந்த இடத்தினை முன்பின் அறிமுகமில்லாத வெவ்வேறு வெளிநாட்டினர் மாறி மாறி கைப்பற்றி ஆட்சி செய்வதையும் பார்த்து ஒருவித விரக்தியுடன் உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளான வன்னிபங்களால் இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது.
பிற்காலங்களில் புலமை பெற்றவர்களால் மாற்றம் செய்யப்பட்டு வாய்மொழியாக பொதுவழக்கில் வழங்கிவரும் செய்யுளில் உள்ள பூனைக்கண், செங்கண், புகைக்கண் போனபின் மானே வடுகாய் விடும் போன்ற வாக்கியங்கள் இக்கல்வெட்டில் இல்லை என்பது தெளிவானது.
குறிப்பு - திருகோணமலை கோட்டை சாசனம் தொடர்பான மேலதிக தகவல்களை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களுடைய இலங்கையில் இந்து சமயம் என்ற நூலின் 170 ஆவது பக்கத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும்







No comments