Breaking News

இலங்கையின் பால் உற்பத்தி தேவையை நிறைவு செய்யக் கூடிய வளங்களை கிழக்கு மாகாணம் கொண்டிருக்கின்றது



(கியாஸ் ஷாபி)

நாட்டின் பால் உற்பத்தி தேவையை பூர்த்தி செய்வதற்கும், சேதனப் பசளையை உற்பத்தி செய்வதற்கும் அனைத்து வளங்களையும் கிழக்கு மாகாணம் பெற்றிருக்கின்றது என கால் நடைகள், பால் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரீ.பி. ஹேரத் தெரிவித்தார்.
"பால் உற்பத்தியும் நிலையான அபிவிருத்தியும்" எனும் தொனிப்பொருளில் இன்று (30) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
மாவட்ட செயலாளர் சமன் பாண்டிக் கோரளயின் வழிகாட்டலின் கிழ், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத ஜெஹம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டுக்கு தேவை யான பாலில் நாம் 40 வீதமான உற்பத்தி செய்கிறோம் அதேவேளை 60 வீதமான இறக்குமதி செய்கின்றோம். பால் இறக்குமதிக்காக 55 பில்லியன் ரூபாவை வருடம்தோறும் செலவு செய்கிறோம்.

எனவே, பால் உற்பத்தியில் இந்த நாடு தன்னிறைவு அடைவதற்காக வேண்டி தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிதியில் ஆகக் கூடுதலாக கால்நடை உற்பத்திக்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அதே போன்று கால்நடை அபிவிருத்தி அமைச்சினால் அதிகமான நிதி இந்த கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
முட்டை, இறைச்சி ஆகியவற்றின் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்திருக்கிறது.
இந்தநிலையில் பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைவதற்கு தேவையான அனைத்து வளங்களையும் கிழக்கு மாகாணம் கொண்டிருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் அதிகமான மாடுகள் நன்கு திட்டமிட்டு வளர்க்கப்படாமல் திறந்தவெளியில் பராமரிக்கப்படுவதாகவும் இதனால், மாடுகளில் இருந்து, வினைத்திறனான உற்பத்திகளை பெற முடியாமல் இருப்பதாகவும் அதனால் ஒரு சிறந்த ஒழங்கமைக்கப்பட்ட பண்ணை முறை அவசியம் முடியும் என அவர் என்னிடம் சந்திக்கும்போது தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு கால்நடை அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியில் அதிகமான பணத்தை வடமாகாணம் மாத்திரமே உற்பத்திக்காக செலவு செய்கின்றது. அதே சமயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அதற்கு ஈடாக தற்போது அதிகமான கரிசனை எடுத்து கால்நடை உற்பத்தியை கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்வதற்காக முயற்சி மேற்கொண்டு வருவது மிகுந்த சந்தோஷத்தை தருகின்றது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் சராசரியாக 1.2 மில்லியன் பசுக்கள் உண்டு. சராசரியாக ஒரு பசுவில் இருந்து 2.8 க்கும் 3 லீற்றருக்கு இடைப்பட்ட பாலையே பெறுகின்றோம்.
இந்த உற்பத்தியை இரண்டு மடங்காகப் மாற்றுவதற்கு அரசாங்கம் தற்போது திட்டமிட்டு வருகின்றது. நடைமுறைப்படுத்தி வருகின்ற நேரத்தில் இந்த குரானா சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது இருந்தாலும் இது ஒரு தேசிய வேலைத்திட்டம் என்ற படியால் நாங்கள் கொரோனா சவால்களுக்கு முகம் கொடுத்தும் இதனை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றோம்.
எங்களுடைய இந்த திட்டம் நிறைவேறும் போதும் காலையிலும் மாலையிலும் இரண்டு தடவைகள் பாலைப் பெறமுடியும். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் போது இரண்டு மடங்காக பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என நினைக்கிறேன்.
அதாவது, நா ட்டின் பால் உற்பத்தி 80 வீதமாக அதிகரிக்கும். மீதி 20 வீதத்தை தான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். இதனை இறக்குமதி செய்வதற்காக பஷில் ராஜபக்ஷ விடே திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
நமது நாட்டில் திட்டமிடப்படாது பாரம்பரியமான முறையில் தான் இன்றும் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகள் சரியாக கட்டமைப்பு ரீதியாக திட்டமிட்டு வளர்க்கும் போதுதான் பால் உற்பத்தியை அதிகரிப்பது மாத்திரமன்றி, ஜனாதிபதியின் கவனம் செலுத்தியுள்ள சேதனப் பசளை உற்பத்தியை அதிகரிப்பதோடு, பண்ணையாளர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மாதமொன்றுக்கு 5000 மெட்ரிக் தொன் கால் நடை கழிப்பொருட்கள் சேருவதாக தகவல்கள் தெரிவக்கின்றன. எனவே, ஒரு முறையான கட்டமைப்பு ரீதியான கால்நடை வளர்ப்பு இடம்பெறும் போது, சேதனப் பசளை உற்பத்தியிலும் கிழக்குமாகாணம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு பிரதான பங்கு வகிக்க முடியும்.
கால்நடை உற்பத்தியாளர்களுக்கு இரண்டு வகையான வருமானம் கிடைக்கின்றது ஒன்று பால் உற்பத்தி மூலம் கிடைக்கின்ற வருமானம். அடுத்தது கால்நடைகளில் இருந்து பெறப்படுகின்ற கழிவுகளைக் கொண்டு அவர்கள் உற்பத்தி செய்கின்ற சேதனப் பசளைகளில் இருந்து பெரியதொரு வருமானம் வாய்ப்பு அவர்களுக்கு காத்திருக்கின்றது.
சேதனப் பசளை உற்பத்திக்கா வளர்ப்பாளர்கள் உற்பத்தி செய்ய முடியும் உற்பத்தி செய்வதற்காக வேண்டிய சகல நிதி வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றது. அவர்களால் அது முடியாத விட்டால் கால்நடையில் இருந்து பெறப்படுகின்ற கழிவுகளை விவசாய அமைச்சு அவர்களிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கும் திட்டங்களை வகுத்து வருகின்றது.
நாட்டில் நஞ்சற்ற பொருட்களை வழங்குவதற்கு அதிகமான பங்களிப்பினை கால்நடை உற்பத்தியாளர்கள் செய்யமுடியும் அதற்கமையவே ஜனாதிபதி சேதனப் பசளை உற்பத்தியை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

No comments