Breaking News

"கிழக்கில் தனிமைப்படுத்தலில் இருக்கும் பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் "


(கியாஸ் ஷாபி)   

பயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்று நிலைவரம் தொடர்பாக இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், இங்கு பல கிராம சேவக பிரிவுகள் உயர் ஆபத்தான வலயமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறன.

கொரோனா  தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் (ஜுன் 19 அதிகாலை வரை) 225 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில் ஆகக்கூடுதலாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பிரிவில் 106 பேரும் திருகோணமலை பிராந்திய சுகாதாரப் பிரிவில் 66 பேரும் கல்முனை சுகாதாரப் பிரிவில் 46 பேரும் அம்பாரை பிராந்திய சுகாதாரப் பிரிவில் 7 பேரும் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். 

அத்தோடு, இதே காலப்பகுதிக்குள் அம்பாரை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா  ஒரு மரணமும் நிகழ்ந்துள்ளது. 

திருகோணமலை மாவட்டத்தில் ஜுன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூன் 15 ஆம் திகதி வரையுமான காலப்பகுதியில் நாளொன்றுக்கு சராசரியாக 80 பேர் வீதம் தொற்றுக்கு இலக்காகி இருந்தனர்.

ஆனால், இங்கு ஜுன் 15 ஆம் திகதிக்கு பிறகு  நாளொன்றுக்கு சராசரியாக 30 பேர் வீதம் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருகின்றனர். இது இந்த மாவட்டத்தின் கொரோனா தொற்று வீழ்ச்சியடைந்து  செல்வதை எடுத்துக் காட்டுகிறது.

அம்பாரை பிராந்திய சுகாதார பிரிவில் ஜுன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூன் 15 ஆம் திகதி வரையுமான காலப்பகுதியில் நாளொன்றுக்கு சராசரியாக 35 பேர் வீதம் தொற்றுக்கு இலக்காகி இருந்தனர். 

ஆனால், இங்கு ஜுன் 15 ஆம் திகதிக்கு பிறகு  நாளொன்றுக்கு சராசரியாக 15 பேராக குறைவடைந்துள்ளது. எனவே, இங்கும் தொற்று வீதம் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது என்று தெரிவித்தார். 

இதேவேளை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவில் ஜுன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூன் 15 ஆம் திகதி வரையுமான காலப்பகுதியில் நாளொன்றுக்கு சராசரியாக100 பேர் வீதம் தொற்றுக்கு இலக்காகி இருந்தனர். 

ஆனால், ஜுன் 15 ஆம் திகதிக்கு பிறகும் நாளாந்தம் சராசரியாக100 க்கும் அதிகமான   தொற்றாளர்கள், வழமைக்கு மாறாக  இனங்காணப்பட்டு வருகின்றார்கள்.

இங்கு மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி , ஓட்டமாவடி, ஏறாவூர் ஆகிய பகுதிகள் இன்னும் உயர் ஆபத்தான வலயமாக இருக்கின்றன என்று தெரிவித்த பணிப்பாளர், 

இந்த சூழ்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணியின் விசேட கூட்டம் ஜூன் 19 ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதில் நாட்டில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தளர்த்தாது தொடர்ச்சியாக அதே நிலையில் வைத்திருப்பது என்றும் பொறுப்பு வாய்ந்த சகல தரப்பினரும் ஒன்றிணைந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் ஜுன் மாதம் ஆரம்பத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 15 பேர் வீதம் பாதிக்கப்பட்டிருந்தாலும், இப்போது நாளொன்றுக்கு 30 பேர் விதம் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த பிராந்தியத்தியத்திலும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்.





 


No comments