கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்.
(கியாஸ் ஷாபி)
கொவிட் தொற்று காரணமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை 10,500 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் கொரோனா 3வது அலையினால் 6500 பேர் தொற்றுக்கு இலக்காகியிருக்கிறார்கள் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தெளபீக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் தொற்று நிலவரம் தொடர்பாக இன்று (8) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதாரப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணங்களில் மூன்றாவது அலையினால் அதிகூடிய பாதிப்பு திருகோணமலைக்கு ஏற்பட்பட்டிருக்கிறது.
இங்கு 2067 நபர்களும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பிரிவில் 2044 நபர்களும் அம்பாறையில் 1314 கல்முனையில் 400 பேரும் மூன்றாவது அலையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 6500 பேர் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்று வரை மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் 167 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதில் கடந்த இறுதி வாரத்தில் மாத்திரம் 49 பேர் மரணமாகியிருக்கிறார்கள். நேற்று (07) ஒரே நாளில் மாத்திரம் 10 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மட்டக்களப்பில் அறுவரும் திருகோணமலையில் இருவரும் கல்முனையில் இருவரும் அடங்குவர்..
இதேவேளை இன்று தடுப்புமருந்து ஏற்றும் வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 25,000 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 25,000 பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் 25,000 பேருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.
இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வயோதிப இல்லங்களில் இருப்போர், கர்ப்பிணி தாய்மார்கள், கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட இருக்கின்றது.
அடுத்த கட்டத்தில் கல்முனை பிராந்தியத்துக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.






No comments