Breaking News

மூதூர் தொகுதிக்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.

 

(கியாஸ் ஷாபி)
  
மூதூர் தேர்தல் தொகுதியில்  அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற  அபிவிருத்தி திட்டம் தொடர்பாக மக்களின்  அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) கிண்ணியா விஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பிரிவுக்கான ஒருங்கிணைப்பாளரும்  மூதூர் தொகுதி இணைப்பாளருமான  இப்ராஹிம் சதாத்  தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  மூதூர் தொகுதி  மகளிர் அமைப்பு பிரதிநிதிகளும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



இந்த கலந்துரையாடலின் போது  கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் முக்கியமாக, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு உழைத்தவர்கள் தற்போது அரசாங்கத்தின்  வேலைவாய்ப்பு மற்றும் சலுகைகளில் இருந்து  புறக்கணிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும், தங்களால் பிரதேச ரீதியாக முன்வைக்கப்படுகின்ற அபிவிருத்தி  திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்த அவர்கள்,
  
கட்சியை எதிர்த்து  கடுமையாக விமர்சித்தவர்களும் மஹிந்த குடும்பத்தை விமர்சித்தவர்களும் தற்போது சலுகைகளை அனுபவித்து வருவதாகவும்  இதனால் கட்சியின் உண்மையான ஆதரவாளர்கள் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்  என்றும் சுட்டிக்காட்டினர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூதூர்  தொகுதி அமைப்பாளர் நிமல் காமினி இதற்கு பதிலளித்து பேசும்போது,

உங்களுடைய விரக்தி நிலையும் ஆதங்கத்தை நான் அறிவேன். இனிமேல் வருகின்ற அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் வேலைவாய்ப்புகளும்  ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவில் உள்ள கட்சியின் அமைப்புக்கள் சங்கங்களின் ஊடாகவே வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும். மூதூர் தொகுதியில்  கட்சியின் வளர்ச்சியை  மேலும் அதிகரித்து கொள்வதற்கு தேவையான செயற்பாடுகளில் தொடர்ந்தும் உங்களுடைய ஒத்துழைப்பு தேவை என்று கூறினார். 

இதனைத் தொடர்ந்து மூதூர் தொகுதி இணைப்பாளர் இப்ராஹிம் சதாத்  கருத்து தெரிவிக்கையில், 

கட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை நானும் எந்தவித நலன்களையும் அடையவில்லை. ஆனால்  தொடர்ந்து கட்சிக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்துகொண்டு வருகிறேன். இதே போன்று உங்களுடைய பங்களிப்பும் கட்சிக்காக தொடர்ந்து இருக்க வேண்டும். 

நாடு எதிர்நோக்கியுள்ள அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில் தற்போது அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அரசாங்கத்தினுடைய அபிவிருத்தித் திட்டங்களும் சேம நலன்களும்  எம்மை நேரடியாக வந்து சேருவதில் சில சங்கடங்கள் இருப்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த நிலையிலும் உங்களுடைய ஆதங்கங்கள் தொடர்பாகவும் உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்தி  தொடர்பாகவும்  கட்சியின் உயர்மட்ட தோடு  நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம். 

உங்கள் பிரதேசங்களில் முன்னுரிமை படுத்தப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பிரதேச பிரதிநிதிகள் என்ற வகையில் நீங்கள் எழுத்து மூலம் எங்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.  


No comments