டெல்டா திரிபடைந்த வைரஸ் கிழக்கிலும் பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது - சுகாதார பணிப்பாளர்
( கியாஸ் ஷாபி )
கிழக்கு மாகாணத்தில் கடந்தை 24 மணி நேரத்தில் மொத்தமாக 144 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 6 மரணங்களும் நிகழ்ந்துள்ளன என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் கொரோனா நிலவரம் தொடர்பாக அவர் இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த 144 பேரில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 69 நபர்களும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவில் 50 நபர்களும் திருகோணமலை பிராந்திய சுகாதாரப் பிரிவில் 13 பேரும் அம்பாரை சுகாதார பிராந்திய 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை திருகோணமலையில் 3 மரணங்களும் கல்முனையில் 2 மரணங்களும் மட்டக்களப்பில் ஒரு மரணமும் கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 13457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 304 மரணங்களும் நிகழ்ந்துள்ளன என்று தெரிவித்தார்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நிலையில் இன்னும் நெருக்கடியான காலகட்டம் நாட்டில் இருந்து விலகவில்லை என்றும் மேல் மாகாணத்தில் சில இடங்களில்
கொரோனாவின் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவி இருப்பதாக தகவல்களும் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸ் தீவிரமாக பரவ கூடியதும் அதிக நோய்த் தாக்கத்தை கொண்டிருக்க கூடியதும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிழக்கு மாகாணமும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
எதிர்வருகின்ற நாட்களில் விடுமுறை மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய தினங்கள் வருவதால் பொதுமக்கள் இது குறித்து கூடிய கரிசனை எடுத்து நடக்க வேண்டும். எனவே பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பேணி முக கவசங்களை தவறாது அணிந்து கொள்வதோடு அடிக்கடி கைகளை சவக்காரம் இட்டு கழுவிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன் .
சுகாதாரப் பணிப்பாளர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது இப்போது 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாட்டில் பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் கிழக்கு மாகாணத்திலும் அடுத்த வாரமளவில் முன்னெடுக்க கூடியதாக இருக்கும் என நம்புகிறேன்.
கல்முனை சுகா பிராந்திய சுகாதாரப் பிரிவில் முதல் தடவையாக எதிர்வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த மாதம் முதலாவது தடுப்பூசி கிழக்கு மாகாணத்தில் செலுத்தப்பட்டது. இதன் பிரகாரம் 74901பேர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 30784 பேரும் உயர் ஆபத்தான கர்ப்பிணித் தாய்மார்கள் 1693 பேரும முன்னணி அரச உத்தியோகத்தர்கள் 19145 பேரும் தொழிற்சாலை ஊழியர்கள் 8049 பேரும் 30 - 60 வயதுக்கும் இடைப்பட்டோர் 10606 பேரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தற்போது பூரண படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.






No comments