புள்ளியிடும் பலகைக்குரிய (Score Board) அடிக்கல் நாட்டும் வைபவம்!
மட்டக்களப்பில் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புற்தரை மைதானமும் மற்றும் பார்வையாளர் அரங்கிற்கான பணிகளும் 90% சதவீதம் நிறைவடைந்த நிலையில் இம் மைதானம் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
இதன் அடுத்த கட்ட நிர்மாணப் பணியான புள்ளியிடும் பலகைக்குரிய (Score Board) அடிக்கல் நாட்டும் வைபவம் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் தலைவர் இ.சிவநாதன் மற்றும் கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பீ.சடாச்சரராஜா ஆகியோரின் தலைமையில் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் செயலாளர் எஸ்.அருன்மொழி ஒழுங்கமைப்பில் மதத்தலைவர்களான ஏ.பவளகாந்தன் மற்றும் அருட்தந்தை இன்னாசி யோசப் அடிகளாரின் ஆசியுடனும், இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரும் மைதான கட்டுமான பணிக்குரிய திட்ட முகாமையாளருமான பந்துல வர்ணபுர கண்காணிப்பில் நேற்று இடம்பெற்றது.
அதுமட்டுமன்றி பார்வையாளர்களுக்குரிய கழிவறைக்கான அடிக்கல்லும் இங்கு நாட்டப்பட்டதுடன் மைதான பராமரிப்புக்குரிய இயந்திரங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியில் இயந்திரங்களை களஞ்சியப்படுத்தும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறார்களின் கைகளினால் மரங்களை பாதுகாப்போம் என்ற தொனியில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டுக்கழக மூத்த உறுப்பினர்கள், கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர் மற்றும் வளர்ந்து வரும் ஈபிபி அணியின் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






No comments