Breaking News

தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

 

( கியாஸ் ஷாபி)  

கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பள்ளிவாயல்களில் சுகாதார வழி முறைகளை மீறி  தொழுகைக்காக வருபவர்களும்,  கொரோனா தடுப்பூசி குறித்து மக்களை அச்சமூட்டும் வகையில்  சமூகத்தில் போலியான கட்டுக்கதைகளை பரப்புவோர்களுக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா மற்றும் குறிஞ்சா கேணி ஆகிய இரு சுகாதார பிரிவுகளையும் கொரோனா  அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பதற்காக கொரோனா கண்காணிப்பு குழு, பள்ளி நிர்வாகிகள் மற்றும் கதீப் மார்களுக்கு ஒழுங்கு படுத்திய  விழிப்புணர்வு கூட்டம் ஒன்று இன்று (8) கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம். ஏ.அனஸ்  தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலும் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தகையவர்களை இனங்கண்டு கண்காணிப்பதற்கு பள்ளிவாயல்களில் குழுக்களை அமைப்பதற்கும் சுகாதார வழிமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி பெறுவதன் அவசியம் குறித்தும் அடிக்கடி ஐந்து நேரத் தொழுகையின் பின்னரும்  பள்ளிவாயல்களில் அறிவிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக வருவோரின் எண்ணிக்கையை  மட்டுபடுத்துவதற்கு, தெரிவு செய்யப்பட்ட சில தக்கியா பள்ளிவாசல்களில் ஜும்மா தொழுகை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இதற்கு உலமா சபையின் அனுமதியைப் பெறவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் உலமா சபை தலைவர் ஏ. எம். ஹிதயத்துல்லா, கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிஎம். எச். எம்.றிஸ்வி, குறிஞ்சா கேணி சுகாதார வைத்திய அதிகாரி எம். ஏ. எம். அஜித், உதவி பிரதேச செயலாளர் ஜே. பஹீமா, பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எம்.வை. மூமீன் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


      

No comments