Breaking News

அரச காணிகளில் உள்ள பள்ளிவாசல்களை பதிவு செய்து கொள்ளுங்கள்

 



(கியாஸ் ஷாபி) 

அரச காணிகளில் பள்ளிவாயல்கள் அமைக்கப்பட்டிருந்தால் அந்தக் காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே கிண்ணியா பிரதேசத்தில் அரச காணிகளில் இருக்கின்ற பள்ளிவாயல்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இதற்காக பதிவு செய்து கொள்ளுமாறு கிண்ணியா பிரதேச செயலாளர்  ஏ. எம். அனஸ்  கேட்டுக்கொண்டுள்ளார்.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கூட்டம் ஒன்று நேற்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான பள்ளிவாயல்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கின்றது. எனவே இவ்வாறான  பள்ளிவாயில்கள் தொடர்பாக சகல ஆவணங்களையும் ஒப்படைத்தால் இதற்கான முதற்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இது தொடர்பாக பள்ளிவாயல் நிர்வாகங்கள் கவனயீனமாக  இருந்தால் பின்னர்  பல்வேறு பாதகமான விளைவுகளை சந்திக்க வேண்டி  ஏற்படும்  என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கும்போது, இந்தப் பிரதேசத்தில் தனியார் காணிகளில் இருக்கின்ற  பல பள்ளிவாயில்கள் இன்னும் முறையாக பதிவு செய்யப்படவில்லை. எனவே அவ்வாறான காணிகளின் உரிமை துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அவற்றை நன்கொடை செய்தவர்களிடம் இருந்து குறித்த ஆவணத்தை உரிய முறைப்படி பள்ளிவாயல் நிர்வாகங்கள்  பெற்றுக்  பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிதாக பள்ளிவாசலை நிர்மாணிப்பதில் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன இதனால் ஏற்கெனவே  இருக்கின்ற பள்ளிவாயல்களையே   மூட வேண்டிய பாதகமான நிலை ஏற்படலாம் என்பதை நாம் அறிவுப்பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே இருக்கின்ற ஒரு பள்ளிவாசலுக்கு அருகில்  இன்னுமொரு பள்ளிவாயல் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது வர்த்தக விளம்பரங்களுக்காகவும்  வியாபார நோக்கங்களுக்காகவும் செய்யப்படுகின்ற ஒரு விடயமாகும்.

குறித்த இடத்தில் பள்ளிவாயில் ஒன்று தேவைதானா  என்பதை அந்தப் பிரதேசத்தில் உள்ள ஏனைய  பள்ளிவாசல் நிர்வாகிகள் தீர்மானிக்க வேண்டும். இதன்பிறகு உலமா சபைக்கு தெரியப்படுத்தி, அங்கிருந்து  முறையான அனுமதியைப் பெற்று  பிரதேச    செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், கிண்ணியா பிரதேசத்தில் இளம் வயது திருமணம் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கின்றது. இதனை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பள்ளிவாயல் நிர்வாகத்தைச் சார்ந்தது. பள்ளிவாயில் நிர்வாகங்கள் எடுத்ததற்கெல்லாம் திருமணத்தை முடித்துக் கொடுக்க முடியாது.

பாடசாலைக்குச் செல்கின்ற பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுப்பதாக எனக்கு முறைப்பாடு கிடைக்கின்றது. இதனால் ஏற்படுகின்ற சமூக  பிரச்சனைகளை பள்ளிவாயல் நிருவாகிகள் அறிந்துகொள்ள வேண்டும். சமூகப் பிரச்சினைகளும் சீரழிவுகளும் ஏற்படுவதற்கு பள்ளி நிர்வாகங்கள் பங்காளிகளாக இருக்க முடியாது. இது தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. வெறும் வணக்க வழிபாடுகளுக்கு மாத்திரம் பள்ளிவாயல்கள் கட்டப்படுவதில்லை. ஒரு சமூகத்தினுடைய அனைத்து விவகாரங்களும் அங்கு நிர்வகிக்கப் படவேண்டும் என்றும்  தெரிவித்தார்    

No comments