Breaking News

தலைமைகளும் ஏன் மௌனம்?


(Y.L.S.ஹமீட்)

காதி நீதிமன்ற நிறுத்தம், பலதாரண மணத்தடை, திருமண வயதெல்லையை அதிகரித்தல் போன்ற பல விடயங்கள் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் செய்யப்படவிருப்பதாக நீதி அமைச்சர் அறிவிக்கிறார்.

இவற்றை நீக்கினால் முஸ்லிம் திருமணச் சட்டத்தில் எஞ்சுவதென்ன?

அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் திருமணச் சட்டத்தை “நீக்கப்” பிரேரணை கொண்டுவந்தார்.

“திருத்தம்” என்ற பெயரில் அதே “நீக்கம்” இடம்பெறப் போகிறது.

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் கைவைக்கும் முனைவு நீண்டகாலமாக இடம்பெற்றுவருகிறது. ஆனாலும் முஸ்லிம்களின் சம்பந்தமில்லாமல் அதனை செய்ய அரசுகளும் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர்களும், குறிப்பாக விடயதானத்திற்குப் பொறுப்பாக இருந்த அடுத்த சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் தயங்கினார்கள்.

இப்பொழுது ஒரு முஸ்லிமைக் கொண்டே முஸ்லிம் சட்டம் சிதைக்கப்பட முயற்சிக்கப்படுகிறது.

ஒரு முஸ்லிமே இதனைச் செய்யும்போது சர்வதேச அவதானமும் இதில் பெரிதாக குவியாது. 

இதில் ஆச்சரியம் என்ன வென்றால், அடுத்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விடயதான அமைச்சர்களாக இருந்தபோது இதில் கைவைக்க தயக்கம் இருந்தது.

இப்பொழுது, இந்த அமைச்சர் தான் அரசிடம் “நல்ல பிள்ளைப்” பெயர் வாங்கிக்கொள்ள அமைச்சரவைத் தீர்மானம் என்பதை சாட்டாக வைத்துக்கொண்டு ஒரு படி வேகமாகவே இயங்குவதாக தெரிகிறது.

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏதோ ஓர் மனச்சாட்சி உள்ள மனிதராக அவர் தோற்றினாலும் தற்போது அவரது சுயரூபம் வெளிவருகிறாதா? பதவிக்காக சமூகத்திற்கு அநியாயம் செய்யத் தயாராகிவிட்டாரா? என்று எண்ணத் தோன்றுகின்றது.

அவர் உண்மையான, மனச்சாட்சி உள்ளவராக இருந்தால் இதனை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்யட்டும். அல்லது ஆகக்குறைந்தது, இந்த சட்டத்தை மாற்றுகின்ற பொறுப்பிலிருந்து ஒதுங்கட்டும். அ்ரசுக்குத் தேவையானால் வேறு யாரையாவது வைத்து அச்சட்டமூலத்தை கொண்டுவரட்டும்.

முஸ்லிம்களுக்கு ஒரு முஸ்லிமை வைத்து அநியாயம் செய்ய எடுக்கப்படும் முயற்சிக்கு ஒரு முஸ்லிமே துணைபோகவேண்டாம். அவ்வநியாயச் செயலை நியாயப்படுத்த, “தான் தேசியப்பட்டியல் எம் பி”, என்று கதைகள் சொல்லவேண்டாம்.

தேசியப்பட்டியல் எம் பி என்றால் அநுபவித்துக்கொண்டு செல்லட்டும். அதைவைத்து சமூகத்தின் முதுகில் குத்தவேண்டாம்.

மறுபுறம், கைதூக்கியோர் வழமைபோன்று மௌனம் காக்க, தலைமைகளும் மௌனம் காப்பதேன்? 

கைதூக்கியோர் பேசாமல் இருப்பது தவறல்ல. அவர்கள் பேசவேண்டுமென்று சமூகம் எதிர்பார்க்கவும் இல்லை. அவர்களிடம் வாங்கிய பணத்திற்கு வாக்களித்ததுடன் பொதுமக்களுக்கும் அவர்களுக்குமான டீல் முடிந்துவிட்டது. சமூகத்திற்கு அவர்களைக் குறைசொல்ல எந்த உரிமையும் கிடையாது.

அவ்வாறு வாக்களித்துவிட்டு இன்று யாராவது குறைகூறுவதாக இருந்தால் எதற்காக அவர்களுக்கு வாக்களித்தோம்; என்று அவர்கள் கூறவேண்டும்.

சமூகத்திற்காக குரல்கொடுக்க, சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்க வாக்களித்தோம்; என்றால் இவர்கள் கடந்த காலங்களில் அவ்வாறு குரல் கொடுத்தார்களா? பிரச்சினைகள் தீர்த்தார்களா? என்ற கேள்விகளுக்கு இந்த வாக்களித்தவர்கள் பதில் சொல்லவேண்டும். ஆனால்!

தலைமைகளும் ஏன் மௌனிக்கிறார்கள்???

No comments