Breaking News

ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது





நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை காரணமாக ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டதாக சட்ட மாஅதிபர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் திகதி வழங்கியிருந்தது.

இந்த சிறைத் தண்டணை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், இரண்டு வருடங்கள் 8 மாதங்களில் நிறைவடையும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமை, சிறைத் தண்டனை முடிவடைந்ததன் பின்னர் பறிக்கப்படும் என சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

அவ்வாறாயின், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 11 வருடங்கள் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை, சபாநாயகரிடம் வலியுறுத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார்.


No comments