Breaking News

கிண்ணியாவில் மேலும் ஐவருக்கு கொரோனா !!

 


(கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி இன்று (1) தெரிவித்தார்.

அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த 2020.12. 28 ஆம் திகதி 97 பேரின் இரத்த மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்தப் பரிசோதனையின் பிரகாரம் ஐந்து நபர்களுக்கு தொற்று இருப்பதாக இன்று அங்கிருந்து வந்த மருத்துவ அறிக்கையின் மூலம் தகவல் கிடைத்திருக்கின்றது என்று தெரிவித்தார். 

அவர், மேலும் கூறுகையில், இதன் பிரகாரம் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்திருக்கின்றது என்றும் ஏற்கெனவே தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்கள் உடன் தொடர்புபட்டவர்களே இந்த ஐவருமாகும் என்றார். 

குறிப்பாக இவர்கள் ஏற்கெனவே மூதூர் பொலிஸ் நிலையத்தில் தொற்றுக்குள்ளான கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்கள் ஆவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இவர்களோடு முதல் நிலை தொடர்பாளர்களாக இருந்தவர்கள் சுமார் 15 நபர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கான ராபிட் அன்டிஜென் பரிசோதனையைச் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது  என்று தெரிவித்த அவர்,    

இந்தப் பிரதேசத்தில் ஒரு குடும்பத்தை மையப்படுத்தி, ஒரு சிறிய கொத்தணியான பரவலே காணப்படுகிறது. இந்த நிலையில், இவற்றை  இலகுவாக கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே அவசியமாகும்.

எனவே, வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் கட்டாயம் 14 நாட்கள் முறையாகப் பேண வேண்டும். அத்தோடு, பொதுமக்கள் சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்படுகின்ற சுகாதார அறிவுறுத்தல்களை கட்டாயம் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்



 


No comments