Breaking News

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்வி அமைச்சு பாராட்டு


(கியாஸ் ஷாபி) 

5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் சிறிது முன்னேற்றம் காட்டியமைக்காக கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு செயலாளர் எம்.சீ.எல். பேர்ணாண்டோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்தப் பாராட்டை அவர் தெரிவித்துள்ளார். அவர் அக்கடித்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கிண்ணியா கல்வி வலயம் கடந்த ஆண்டு 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றின் படி 99 வது இடத்தில் இருந்து 98 வது இடத்திற்கு சிறிது முன்னேற்றம் காட்டியுள்ளது. இதற்காக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், இந்த முன்னேற்றத்தோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முயற்சி செய்தால் கிண்ணியா வலயம் இன்னும் முன்னேற்றம் காட்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இதற்காக வலயக் கல்வி அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை இதுவரை முன்னெடுத்திருக்கும் என நான் நம்புகின்றேன்.

எனவே, பின்வரும் விடயம் தொடர்பில் வலயக் கல்வி அலுவலகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எனக்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

1. வலயப் பெறுபேறுகள் குறைவுக்கு காரணம் என இனங்காணப்பட்டுள்ள விடயங்கள்

2. இவற்றை நிவர்த்திக்க வலயக் கல்வி அலுவலகம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் 

3. இந்த நடவடிக்கைகளை நெறிப்படுத்த அடையாளப் படுத்தப்பட்டுள்ள மேற்பார்வை பொறிமுறைகள்

4. 2021 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கிண்ணியா வலயத்தின் தேசிய மட்ட இலக்கு.

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (News Time Tamil)



No comments