"தமிழ் சமூகத்தோடு சேர்ந்து முஸ்லிம்கள் எதிர்ப்பைக் காட்டுவது தவறாகாது" இம்ரான் எம்.பி.
கொவிட் தொற்றினால், இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்குவது தொடர்பாக அரசாங்க தரப்பில் இதுவரை எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக முஸ்லிம் சமூகம் சொல்லொனா துயரங்களோடு தினமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த நிலையில் தமிழ் சமூகத்தோடு இணைந்து தங்களுடைய எதிர்ப்பினை முஸ்லிம்கள் காட்டுவது தவறாகாது என திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நடைபெறவுள்ள அக்ஸாரியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி தொடர்பான அறிமுக நிகழ்வும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (6) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற போது, இந்த போட்டி தொடரின் அனுரணையாளராக கலந்து கொண்டு உரையாட்டுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர், அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி கிண்ணியாவை வந்தடைந்தபோது, கிண்ணியா பிரதேச மக்கள் அதற்கு அமோக வரவேற்பு அளித்தார்கள்.
பொது மக்கள் மாத்திரமன்றி இளைஞர்களும் இன்று அரசாங்கத்தின் அடாவடி செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கி இருக்கின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது.
அதேபோன்று, தமிழ் மக்கள் மாத்திரமன்றி முஸ்லிம் மக்கள் மாத்திரமன்றி இன்று சிங்கள மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி இறங்கி போராட்டங்களை நடத்துகிறார்கள்.
தமிழ் மக்கள் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இன்னும் போராடுகிறார்கள். அவர்களுடைய நினைவு தூபிகள் இடிக்கப்பட்டு அளிக்கப்படுகின்றன. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகள் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் அபகரிக்கப்படுகின்றன.
மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்னும் அவர்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றது. அதற்காக அவர்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இப்போது தமிழ் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை நசிக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களினால் காலாகாலமாக பாதுகாக்கப்பட்ட நினைவுத் தூபிகள் தற்போது இரவோடு இரவாக அடித்து உடைக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுபான்மை இனத்தவர்களின் மத மற்றும் உடமைகள் சம்பந்தமான விடயங்களுக்கு அரசாங்கம் மதிப்பளிக்காமல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான விடயங்களை வெளிக்கொண்டு வருவதற்காக நாம் தற்போது எமது போராட்டங்களை மூவின மக்களுடனும் சேர்ந்து, முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த மாவட்டத்தையும் கிழக்கு மாகாணத்தையும் கௌரவித்து இளைஞர் என்ற வகையில் எனக்கு ஐக்கிய மக்கள் சக்தி உதவித் தவிசாளர் பதவியை தந்திருக்கிறது.
திருகோணமலை மாவட்டத்தில் UNP பவுண்டேஷன் மூலம் பல்வேறு வேலைத் திட்டங்களை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றோம்.
கடந்த காலத்தில் அல் அக்ஸா கல்லூரி மாணவர்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்து இந்தப் பிரதேசத்துக்கு பெருமை தேடித்தந்த இருக்கின்றார்கள். இந்த வகையில் இந்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி எமது பிரதேச இளைஞர்களுக்கு மேலும் விளையாட்டுத்துறையில் ஆர்வத்தையும் ஆற்றலையும் கொடுக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்தார்.






No comments