அதிபர்கள் இடமாற்றத்தில் அநீதி இழைக்கப்படவில்லை.
கிழக்கு மாகாண அதிபர் இடமாற்றம் நியாயமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளது.- செயலாளர் .
(கியாஸ் ஷாபி)
கிழக்கு மாகாண வருடாந்த அதிபர் இடமாற்றம் உரிய சட்டதிட்டங்களுக்கமைய நியாயமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளது என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சீ.எல்.பெர்னாண்டோவினால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அதிபர் இடமாற்ற சுற்றுநிருபத்துக்கமைய அதிபர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டு, அதன் அடிப்படையிலேயே இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேன்முறையீடு செய்ய விரும்பினால் அதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இடமாற்றத்தின் மூலம் எந்த ஒரு அதிபருக்கும் அநியாயம் இடம் பெறுவற்கான வாய்ப்பு இல்லை.
சில வலயக் கல்வி அலுவலகப் பிரிவுகளில் மேலதிக அதிபர்கள் கடமையில் இருக்கின்றார்கள். இன்னும் சில அதிபர்கள் பாடசாலைப் பொறுப்புகள் இன்றி இருக்கின்றார்கள். சில வலயங்களில் அதிபர் பற்றாக்குறை இருக்கின்றது. இந்நிலையில் அதிபர்களை சமப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கணக்காய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இதற்காக நியமிக்கப்பட்ட இடமாற்ற சபை மூலம் இந்த அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்முனை வலயத்தில் மேலதிக அதிபர்கள் இருப்பதாக கணக்காய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் தெரியும். இந்த இடமாற்றத்தின் மூலம் மேலதிகமாகவுள்ள அதிபர்கள் தேவையான இடங்களுக்கு சமப்படுத்தப் பட்டுள்ளார்கள்.
இந்த இடமாற்ற சபையில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிரதிநிதி ஒருவரும் இடம் பெற்றுள்ளார். இந்த வகையில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பங்கேற்புடன் தான் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனைவிட இந்த அதிபர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை உறுப்பினராகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் இருக்கின்றார். இந்நிலையில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தனக்கு இதில் தொடர்பில்லை என ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து நான் கவலையடைகின்றேன் என்றார்.






No comments