Breaking News

ரிசாத் பதியுத்தீனின் கைது அநாகரீகமானது!


"ஏப்ரல் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரியை மூடி மறைத்து, மக்களை திசை திருப்புவதற்காகவே இவ்வாறான கைதுகள் இடம் பெறுகின்றன" எம்.ஆர்.எம் பைசல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுத்தீனின் கைது அநாகரீகமானது மட்டுமன்றி, ஜனநாயக விரோத நடவடிக்கையுமாகும். எனவே, இந்த நடவடிக்கை வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொது செயலாளர் எம்.ஆர்.எம் பைசல் தெரிவித்துள்ளார்.

ரிசாத் பதியுத்தீனின் கைது தொடர்பாக இன்று (25) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  

சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்ற உத்தரவோ பெறப்படாமல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ளதையிட்டுக் கவலையடைகின்றேன்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அறிக்கைகள் கையளிக்கப்பட்ட பின்னரும், பேராயர் உட்பட பலரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றிருக்கிறார்கள்.

இதனால், அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களும் மேலோங்கியிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் ஏப்ரல் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரியை மூடி மறைத்து, மக்களை திசை திருப்புவதற்காகவே இவ்வாறான கைதுகள் இடம் பெறுகின்றன.

கடந்த சில தினங்களாக பாராளுமன்றில் அரசை, அரசின் செயல்பாட்டை மற்றும் அதனது வங்குரோத்து நிலமையினை சில பாராளமன்ற உறுப்பினர்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருந்தனர்

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு உட்பட அரசியல் பழிவாங்கல் சம்பந்தமான ஜனாதிபதி ஆனைக்குழுவின் சிபார்சு சம்பந்தமான விவாதங்களில் அரசை கிழித்து தொங்கவிட்ட அனுரகுமார திசாநாயக்க, ஹரின் பெனான்டோ, நளின் பண்டார, மனுஷ நாணயக்கார போன்றவர்களின் நாடாளுமன்ற விவாதம் அரசியின் சர்வாதிகார போக்கை அம்பலப்படுத்தியது.

வாக்களித்த 69 லட்ச மக்களில் பெரும்பான்மை  பௌத்த பேரினவாதிகளை திருப்திப்படுத்தவும் அண்மைய பாராளுமன்ற விவாதங்களில் அம்மணமான அரசுக்கு ஆடை அணிந்துகொள்ள ஏற்பட்ட அவசரத்தேவையை நிவர்த்தி செய்யுகொள்ள மக்கள் கவனத்தை திசை திருப்பவுமே அவசர அவசரமாக இந்தக் கைது நடந்துள்ளது என்பதே உண்மையாகும். 

ஆகையால்,  முறைகேடான அரசியல் உள்நோக்கம் கொண்ட கைதாகும். இது ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலாகவே கருதப்படுகின்றது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

www.newstimetamil.com


No comments