Breaking News

கிண்ணியா நகர சபையின் உறுப்பினராக ஏன் நாஸிக் மஜீத் தெரிவுசெய்யப்பட்டார்?





நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் கிண்ணியா நகர சபை உறுப்பினராக நாஸிக் மஜீத் நேற்று (16) பதவியேற்றுக் கொண்டார். 

NFGG கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர், அக்கட்சியின் நகர உறுப்பினராக இருந்த ஏ.எம். அனீஸ் இராஜினமா செய்ததையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பதவியேற்பு வைபவம்  நகரசபை தவிசாளர் எம்.எச். நளீம்  முன்னிலையில்  இடம்பெற்றது. இந்த நிலையில் அக்கட்சியில் வட்டார வேட்பாளராக போட்டியிட்ட முக்தார் என்பவர் பின்வருமாறு தனது முகநூல் பக்கத்தில் கருத்தொன்றைப் பதிவிட்டிருந்தார்.


2018 ஆண்டு உ ள்ளூராட்சி மன்றத்தேர்தல் கி ண்ணியா நகர சபையில் NFGG கட்சி சார்பாக மாஞ்சோலை வட்டாரத்தில் வேட்பாளராக போட்டியிட்டு
245 வாக்குகள் எனக்கு மக்கள் வாக்களித்தார்கள்.
NFGG தலைமை யும் ,கிண்ணியா செயற்குழுவும் இணைந்து எடுத்த
முடிவுகள் .
போனஸ் ஆசனத்தை வாக்கின் அடிப்படையில் பகிர்ந்தளிப்போம் என தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய 1 அனீஸ் AI
2 ரனீஸ் BA
3 முக்தார் BA
4 முஆது BA

இது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இறுக்கமான முடிவு.ஆனால் , இஸ்லாமியஅரபு சட்டக் கலையில் தேர்ச்சிபெற்றவர் , மாணவர்களின் ஆசான் , சமூதாயத்தின் வழிகாட்டி .என்னோடு நன்றாக பழகியவர் இப்படிப்பட்டவர் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் ஓடிப்போய் ஆசனத்தில் அமர்ந்தது ஆச்சரியத்தையும் வியப்பையும் ஊட்டிய எனக்கு!

இதற்கு பதிலளிக்கும் வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிண்ணியா நிறைவேற்றுக் குழு தனது முகநூல் பக்கத்தில் இன்று (17) பின்வருமாறு பதிவொன்றை வெளியிட்டிருந்தது

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிண்ணியா நகரசபையில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு போனஸ் (Over hang) அடிப்படையில் ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றது.
இதன்படி கிண்ணியா நகரசபை உறுப்பினராக முதலாவது வருடத்திற்கு நாஸிக் மஜீதும், பின்னர் சகோதர நசுருதீனும், அதன் பின்னர் சகோதரர் முபீத்தும் சபைக்கு சுழற்சி அடிப்படையில் உறுப்பினர்களாக செல்ல வேண்டும் என்ற தீர்மானமே ஆரம்பத்தில் எடுக்கப்பட்டது. என்றாலும் கட்சியில் போட்டியிட்ட அண்ணல் நகர் வேட்பாளர் அனீஸ் மற்றும் பெரியாற்றுமுனை வட்டார வேட்பாளர் உமர் அலி ரனீஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பதவி இழுபறி காரணமாக நாஸிக் மஜீத் முதலில் சபைக்கு செல்கின்ற தீர்மானம் கைவிடப்பட்டு, வட்டாரங்களில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் முறையை சபைக்கு செல்வதென கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில், பெற்ற வாக்குகளின் அடிப்படையில் முதலாவது வருடத்திற்கு அண்ணல் நகர் வட்டார வேட்பாளர் அனீஸ் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அவரது ஒரு வருடகால பதவிக் காலம் முடிவுற்ற பின்னர், அவர் மீண்டும் மூன்று மாதங்கள் நீடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவருக்கு மேலும் மூன்று மாதங்கள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவர் தனது ஒரு வருடம் மற்றும் மூன்று மாதங்களுக்கான பதவிக் காலம் முடிவுற்றதன் பின்னர், NFGG கட்சியை குறை கூறிக்கொண்டு கட்சியில் இருந்து வெளியேறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
அதன் பின்னர், சுழற்சி அடிப்படையில் இரண்டாவது வருடத்திற்கான நகரசபை உறுப்பினர் பதவிக்காக பெரியாற்றுமுனை வட்டார வரவேற்பாளர் உமர் அலி ரனீஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். உமர் அலி ரனீஸின் ஒரு வருட கால பதவிக்காலம் முடிந்ததும் பதவியை இராஜினாமா செய்து, அடுத்த வேட்பாளருக்கு வழங்குமாறு கேட்கப்பட்டார். எனினும், தனது உறுப்பினர் பதிவியை இராஜினாமா செய்யாது, கட்சியின் தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழுவின் கோரிக்கையை புறந்தள்ளி, பதவியில் இருந்து கொண்டே கட்சியையும், தலைமைத்துவ சபையையும், கிண்ணியா செயற்குழுவையும் மிக காரசாரமாக விமர்சித்த வண்ணம் ஒரு வருடமும் ஐந்து மாதங்களும் பதவி வகித்து வந்த நிலையில், மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே அவரிடமிருந்து இராஜினாமாவை பெற்றுக்கொண்டோம்.
பதவியை விட்டு விலகிய அவர் உடனடியாக முன்னைய உறுப்பினர் அனீஸ் செய்தது போலவே எமது NFGG கட்சியை விமர்சித்தவாறு, கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் தனது இராஜினாமா கடிதத்தோடு, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீங்கும் தனது நிலைப்பாட்டையும் கடிதமாக எழுதி முகநூலில் பதிவேற்றியிருந்தார். காரணம் கேட்ட போது, எம் கட்சியோடு தொடர்ந்து பயணிக்க முடியாது என கூறிவிட்டார்.
இவ்வாறு, முன்னர் இருந்த இரண்டு வேட்பாளர்களும் தங்களது வாக்குறுதிகளை மீறிய நிலையில், கட்சியின் செயற்குழு ஏற்கனவே தீர்மானித்த படி, மூன்றாவதாக செல்லவிருந்த சின்னக் கிண்ணியா வட்டார வேட்பாளர் சகோ. முக்தாருக்கு உறுப்பினர் பதவியை வழங்காது, கட்சியின் செயற் குழு உறுப்பினர் ஒருவருக்கு நகர சபை உறுப்பினர் பதவியை வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்கவே நாஸிக் மஜீத் NFGG இன் நகரசபை உறுப்பினராக மூன்றாவது பதவி காலத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது வருடத்திற்காக உறுப்பினராக அனுப்பப்படவிருந்த சகோ. முக்தார், கட்சியின் வளர்ச்சிக்கு எந்தவித பங்களிப்பையும் வழங்காது, தானும் தனது வேலையும் என்று இருந்ததோடு, கட்சி அழைக்கும் எந்தக் கூட்டங்களுக்கும் கூட சமூகமளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பதவிக்காக மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வரும் இவர்கள், கட்சியின் வளர்ச்சிக்காக பங்களிக்க முன்வருவதில்லை.
முன்னர் இருந்த இரண்டு வேட்பாளர்களும் கட்சியின் கோரிக்கைகளை நிராகரித்து, அவரது பதவிக் காலத்தையும் அனுபவித்து, அதையும் தாண்டி இருவருமாக சேர்ந்து மூன்று வருடங்களை கடத்திய பின்னர் இறுதியாக இருக்கின்ற ஒரு வருடத்திற்காக தற்போதைய உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பதவி வகிப்பதும், தமது பதவிக் காலம் முடிந்ததும், பதவி வழங்கி அழகு பார்த்த கட்சியை விமர்சித்துக் கொண்டு வெளியேறுவதுமான நன்றி கெட்ட செயல்களிலிருந்து கட்சியையும், உறுப்புரிமையையும் காப்பாற்ற வேண்டுமென்ற நன் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இப்போது சொல்லுங்கள், கட்சி துரோகம் செய்ததா? அல்லது, முன்னர் பதவி வகித்த அனீஸ் மற்றும் உமர் அலி ரனீஸ் ஆகியோர் துரோகமிழைத்தார்களா? www.newstimtamil.com

No comments