Breaking News

தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களில் அறுவருக்கு இரத்த உறைவு - மூவர் பலி!

 

இலங்கையில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களில் மூவர் இரத்த உறைவு காரணமாக உயிரிழந்துள்ளனர் - என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு உயிர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" எக்ஸ்ட்ரா செனகா மட்டுமல்ல எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், அவ்வாறு செலுத்தப்பட்டவர்களில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவது வழமை. அந்தவகையில் எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசி ஏற்றப்பட்டு சில வாரங்களுக்குள், சில நாடுகளில் ஒருசிலருக்கு இரத்த உறைவு எற்பட்ட சம்பவங்கள் பதிவாகின. இலங்கையிலும் அவ்வாறான 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தானத்தின் பக்க விளைவுகள் தொடர்பிலான குழுவின் அறிக்கையின் பிரகாரம் இரத்த உறைவு மற்றும் தடுப்பூசிக்கு இடையில் நேரடி தொடர்புகள் எவையும் கண்டறியப்படவில்லையென கூறப்பட்டுள்ளது.எனினும், ஒரு மில்லியன் சனத்தொகையில் 4 முதல் 6 பேருக்கு இவ்வாறு ஒவ்வாமைகள் ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எக்ஸ்டரா செனாகா தடுப்பூசியை தொடர்ந்து செலுத்திக்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளித்துள்ளது.  இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் பணி நிறுத்தப்படவில்லை. மே முதல் வாரம் முதல் எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ், முதல் சுற்றில் செலுத்தப்பட்டவர்களுக்கு செலுத்தப்படும்.

அதேவேளை, தடுப்பூசி தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படும் விதத்திலான கருத்துகளை வெளியிடாமல் இருப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்." - என்றார்.

No comments