Breaking News

கிண்ணியாவில் இதுவரை 424 பாதிப்பு ; 33 பேர் பலி!!




(கியாஸ் ஷாபி)

மூன்றாவது கொரோனா அலையின் தாக்கத்தினால்  இன்று (ஜூன் 15) வரை  கிண்ணியா சுகாதாரப் பிரிவில் 424 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 33 பேர் பலியாகியுள்ளனர் என்றும்  கிண்ணியா பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.
கிண்ணியா சுகாதாரப் பிரிவின் கொரோனா நிலவரம் குறித்து, இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், 

கிண்ணியா பிரதேசத்தில் அதிகரித்த கொரோனா தாக்கம் கடந்த ஒரு வார காலமாக திடீர் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இதற்கு காராணம்  பொது மக்களின் ஒத்துழைப்பே ஆகும்.

ஜூன் 8 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது.  ஆரம்பத்தில் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றிய அச்ச  உணர்வு  காணப்பட்ட போதிலும் தொடர்ச்சியாக  வழங்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியதைக் காணக்கூடியதாக இருந்தது. 

இதன் காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் 80 சத வீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது போனவர்கள் தமக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு  நேரடியாகவும் தொலைபேசி மூலமும் எனக்கு அழைப்பு விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இருந்த போதிலும் தடுப்பூசிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

தடுப்பூசிகளை மேலும் தருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம் விரைவில் தடுப்பூசிகள் கிடைத்து விடும் எனவும் கிடைத்தவுடன் மீதியாக உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும். 

அடுத்த கட்டமாக  கர்ப்பிணித் தாய்மார்களும் 30 வயதிற்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்க உள்ளோம். இவர்களும் பூரண ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழுமையாக தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலேத்தேய நாடுகளில் இத் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டதன் விளைவாக அங்கு கொரோனா நோய் பூச்சிய நிலையை எட்டியுள்ளது.

முதலாவது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கான  இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

நாங்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டோம் என்ற எண்ணத்துடன் பொடுபோக்காக இருந்து விடாது தொடர்ச்சியாகப் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அவர் வேண்டிக் கொண்டார்

No comments