கோவிட் தொற்றால் உயிரிழந்தோரின் உடலை ஆற்றுக்குள் வீசிய கொடூரம்
உத்தரப் பிரதேச மாநிலம் கங்கை நதியில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் வீசப்பட்டுக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பீஹாரிலுள்ள பக்ஸர் மாவட்டம், சவுசா கிராமத்தின் மகாதேவ் கட் வழியாகச் செல்லும் கங்கை நதியில் இந்த உடல்கள் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
கோவிட் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், அதில் இறப்பவர்களின் உடல்களை உறவினர்கள் நதியில் மிதக்க விடுவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆற்றில் தூக்கி வீசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கோட்வாலி பகுதியில் ராப்தி ஆற்றில் பிபிஇ கிட் அணிந்த ஒருவரும் மற்றொருவரும் ஆற்றுப் பாலத்திலிருந்து உடலைத் தூக்கி ஆற்றில் வீசியுள்ளனர்.
அப்போது சாலையில் காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 28-ம் திகதி பல்ராம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேம்நாத் என்பவர் கோவிட்டால் உயிரிழந்திருக்கிறார். பின்னர் அவரது உடலை பாதுகாப்பான முறையில் இறுதி சடங்கிற்காக மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் வழங்கியிருக்கிறது. அவர்கள் உடலை கண்ணியமாக அடக்கம் செய்யாமல் ஆற்றில் தூக்கி வீசியிருக்கின்றனர் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக உடலைத் தூக்கி வீசிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.







No comments