Breaking News

கிழக்கில் டெல்டா வைரஸ் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்




(கியாஸ் ஷாபி)

கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு பிராந்திய சுகாதார பிரிவுகளிலும் டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக  இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக மக்கள் அதிகமாக அச்சம் கொண்டு பீதியுடன் வாழ்வதை எங்களால்  அவதானிக்க முடிகின்றது. எவ்வாறாயினும்  கிழக்கு மாகாணத்தில் ஒரு நிலையான பாதுகாப்பு வரும் வரை சகல மக்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை இருந்து கொண்டே இருக்கிறது  என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக்  தெரிவித்தார்.

கிண்ணியா தள வைத்தியசாலையில் நேற்று (7) மாலை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, கல்முனை ஆகிய பிராந்திய சுகாதாரப் பிரிவுகளில்   இன்னும் கொரோனாவின்  ஆபத்து நீங்கவில்லை. எனவே அந்த இரண்டு சுகாதார பிரிவுகளிலும் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் அதிக அக்கறை செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
 
எதிர்வரும் திங்கள் (12) முதல் கிழக்கு மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முதற்தடவையாக வழங்கப்பட உள்ளதோடு  பாடசாலையில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் அன்றைய தினம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

அதே போன்று  ஏற்கனவே முதலாவது ஊசி வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு இரண்டாவது ஊசியும் வியாழக்கிழமையில் (8) இருந்து வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர்,

இந்த தடுப்புசி வழங்கும் நிகழ்வுகள் ஆதார வைத்தியசாலைகள், பிரதேச வைத்தியசாலைகள், பிரதேச சுகாதார வைத்திய அலுவலகங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் வழங்கப்படவுள்ளதாகவும்  உள்ளது. எனவே இது சம்பந்தமாக பொதுமக்கள் கிராம சேவகர் மற்றும் பிரதேச பொதுச் சுகாதார பாரிசோதகர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு  அவர்களுடைய தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு அது தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.அதேபோன்று திருகோணமலை மாவட்டத்திற்கு  25 ஆயிரம் தடுப்புசிகள் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளன. அம்பாரை மாவட்டத்திற்கும் இதேயளவான தடுப்பூசிகள் இன்று (வெள்ளி) வழங்கப்பட்டுள்ளதோடு இதுவரை வழங்கப்படாத கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு திங்கட்கிழமை முதல் ஒரு தொகுதி  ஊசிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் அரசாங்க அதிகாரிகள் அரசாங்க காரியங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்  சுகாதாரத் துறையினர் மற்றும்   அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்

எனவே இந்நோய் குறைந்துவிட்டது என மக்கள் எண்ணி தாங்கள் தங்களுடைய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்காமல் மேலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு நிலையான ஒரு பாதுகாப்பு வரும் வரை சகல மக்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் இந்த நோய் சமூகத்தில் மறைந்து காணப்படுவதால் எந்த வித அறிகுறிகள் இல்லாமலும் ஒரு தனி  மனிதனால்  சமூகத்தில் பரவலை ஏற்படுத்த முடியும். இதனை ஆய்வுகூடப் பரிசோதனை மூலமே நிரூபிக்கக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் அனைத்து பொது மக்களும் அனைவரும்  அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

கடந்த ஜுன் மாதத்தில் கிழக்கில் 5693 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருகோணமலை பிராந்தியத்தில்
1020 பேரும் மட்டக்களப்பு பிராந்தியத்தில் 3416 பேரும் அம்பாரை பிராந்தியத்தில் 362 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 895 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் கல்முனை சுகாதார பிராந்திய சுகாதார பிரிவில் 12 பேரும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பிரிவு 26 பேரும்   அம்பாரை பிராந்தியத்தில் சுகாதார பிரிவில் நான்கு பேரும் திருகோணமலை பிராந்திய சுகாதாரப் பிரிவில் 10 பேரும் அடையாளம் காணப்பட்ட தோடு அவற்றில் மட்டக்களப்பு கல்முனை ஆகிய இரு சுகாதார பிரிவுகளிலும் தலா ஒரு மரணங்கள் நிகழ்ந்ததாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும்  தெரிவித்தார்

No comments