Breaking News

கிண்ணியா தள வைத்தியசாலைக்கு ஒட்சிசன் இயந்திரம் அன்பளிப்புச் செய்யப்பட்டது

  



(கியாஸ் ஷாபி)

நீண்ட காலமாக பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவரும் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு நேற்று (7) 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான ஒட்சிசன் இயந்திரம் (Oxygen Ventilator Machine)  அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்த இயந்திரம் MFCD நிறுவனத்தின் அனுசரணையுடன் Human Appeal Australia நிறுவனத்தின் நிதி உதவியில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தெளபீக், கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எம்.ஜிப்ரி, MFCD நிறுவனத்தின் தலைவர் ஹனான் குசைன்  நிறுவனத்தின் இணைப்பாளர் ஹஷிம், நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா நசூர்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த  வைத்திய சாலையில் போதுமான இடப் பற்றாக்குறை  மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். தற்போது, உடனடியாக இவற்றை தீர்த்து வைப்பதற்கு மாகாண சபையில் நிதி இல்லை. என்றாலும் ஒரு தற்காலிக தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், பழைய கட்டடம் ஒன்றின் திருத்த வேலைக்கு 1,8 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருக்கிறேன்.

கொரோனாவினால் இலங்கையிலேயே அதிகூடிய மரணங்கள் நிகழ்ந்த ஒரு பிரதேசமாக கிண்ணியா பதியப்பட்டிருக்கிறது. கிண்ணியாவின் சனத்தொகைக்கு ஏற்ப இந்த வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் MFCD நிறுவனத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கும் போது,

இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு வகையான சமூக வேலைத்திட்டங்களை MFCD நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக கொரோனா  அசாதாரண சூழ்நிலையில் இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் மக்களுக்கான பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவதோடு,  வைத்தியசாலைகளுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு உபகரணங்களையும்  அன்பளிப்புச் செய்து வருகின்றது என்று தெரிவித்தார்.

வைத்தியசாலையின் தேவையை கருத்திற் கொண்டு, MFCD நிறுவத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா நசூர்தீன் இதற்கான கோரிக்கையினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    

No comments