Breaking News

திருகோணமலை மாவட்டத்தில் நானோ தொழில் நுட்ப குடிநீர் திட்டங்கள்

 

(கியாஸ் ஷாபி ) 

திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் வசதி அற்ற பிரதேசங்களுக்கு 50 நனோ தொழிநுட்ப வசதியுடன் கூடிய குடிநீர் திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சனி (31) மாலை நடைபெற்ற கிராமிய குடிநீர் வழங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே இதனை தெரிவித்தார்.

குடிநீர் வசதியற்ற பிரதேசங்களுக்கு உடனடி மற்றும் மத்தியகால அடிப்படையிலான தீர்வுகளை வழங்கவுள்ளோம். மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சிறுநீரக நோயாளிகள் காணப்படுகின்றனர். குறித்த பிரதேசங்களின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குடிநீர் வசதியற்ற நீர் இணைப்பு இதுவரை வழங்கப்படாத பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு குறித்த வசதிகளினை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கங்களுள் ஒன்றாக உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் மூலம் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்படவுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்த இனத்திற்கு மாத்திரமன்றி உண்மைத்தேவைப்பாட்டின் அடிப்படையில் அனைத்து இன மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தற்போது எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக வெருகல் போன்ற பிரதேசங்களில் தமிழ் அரசியல்வாதிகளால் செய்ய முடியாத பல அபிவிருத்தி வேலைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. தற்போது மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டம் காரணமாக குடிநீர் இணைப்பு அற்ற பிரதேசங்களுக்கு உரிய இணைப்பு குறுகிய காலத்தில் வழங்கப்படும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துகோரால இதன்போது தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன், உரிய திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்

No comments