கிண்ணியா பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்தனர்!
கிண்ணியா சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு
(கியாஸ் ஷாபி )
திருகோணமலை மாவட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பாக கிண்ணியா சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் சனிக்கிழமை (31) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான கபில நுவான் அத்துகோரலவை சந்தித்தனர்.
கிண்ணியா ஷூரா சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பொதுவான விவகாரங்களும் கிண்ணியா பிரதேச சபை பிரதேசத்தில் கிண்ணியா பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவையை வாரத்தில் இரண்டு நாட்கள் நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் அனுமதியும் செய்து தருமாறும் கோரப்பட்டது.
மேலும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு மாவட்ட மக்களுடைய பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் உடன்பாடு காணப்பட்டது.
எதிர்காலத்தில் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக செய்யக்கூடிய சேவைகளை செய்வதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்பில் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை, கிண்ணியா மஜ்லிஸ் அஷ் ஷுரா, கிண்ணியா பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.






No comments