மூதூர் கட்டைபறிச்சான் உப அலுவலகம் வினைத்திறனுடன் இயங்க வேண்டும்
பிரதேச சபையின் கீழ் உள்ள கட்டைபறிச்சான் உப அலுவலகம் ஆரோக்கியமான அலுவலகமாக இயங்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என மூதூர் பிரதேச சபையின் செயலவை உறுப்பினர் திருமதி த. ஜெயமாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதேச சபையின் கட்டைபறிச்சான் உப அலுவலக பிரிவில் இன்று (2) நடந்த உள்ளுராட்சி சட்டம் தொடர்பான செயலமர்வில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து பேசிய ஜெயமாலா குறிப்பிடுகையில், கட்டைபறிச்சான் வட்டாரத்தைப்பொறுத்தமட்டில் யுத்ததின் முன்னர் இந்த அலுவலகம் ஆரோக்கியமாக செயற்பட்டது. அதன்பின்னர் இந்த அலுவலகம் இயங்கவில்லை. நூலகம்மட்டுமே தற்சமயம் செயற்படுகிறது.
இப்பிரதேச மக்கள் மூதூர் நகரத்திற்கே செல்லவேண்டிய நிலமை உள்ளது. எமது மக்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் கடமை பொறுப்பு, சேவைகள் பற்றி தெளிவில்லாமல் உள்ளனர். அவர்கள் எம்மிடம் பாராளுமன்ற உறுப்பினரைப்போன்று வேலைவாய்ப்பை யும் கோருகின்றனர்.
எனவே நாம் எமது சபை அமர்வுகளில் சபையின் கடமை பொறுப்புக்களை, சேவைகளை தெளிவு படுத்துங்கள் எனக்கோரி வந்துள்ளோம். அதற்கான இந்த சந்தர்பத்தை எமது பிரதேச சபைக்கு இளைஞர் அபிவிருத்தி அகம் ஏற்பாடு செய்து தந்துள்ளது.
எனவே எதிர்காலத்தில் கட்டைபறிச்சான் வட்டாரத்தின் உப அலுவலகம் எமது மக்களுக்கான ஆரோக்கியமான சேவையை மீண்டும் வழங்க முன்வர வேண்டும்.
அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி திணைக்கள சிரேஷ்ட ஆய்வு அதிகாரி ச. சர்வேஸ்வரன், அகத்தின் இணைப்பாளர் பொன் சற்சிவானந்தம், பிரதேச சபையின் செயலாளர் வ. சத்தியஜோதி, முன்னாள் சேனையூர் மத்திய கல்லூரி அதிபர். செ. சிறிதரன் உள்ளிட்ட சபை அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.







No comments