ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் மேலும் பல சவால்கள் காத்திருக்கின்றன!
(கியாஸ் ஷாபி)
இஸ்லாமிய நோக்கில் பள்ளிவாயல் நிர்வாகிகள் என்பவர்கள் வெறுமனே மார்க்க கடமைகளை மாத்திரம் பார்ப்பவர்கள் அல்ல. மாறாக பள்ளிவாசல்களை ஒரு சமூகத்தின் மத்திய நிலையமாக கருதி, செயல்படுபவர்கள் என்றும் தற்போது நாடு மிக மோசமான கொரோனா அனர்த்தம் ஒன்றை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் சமூகத்துக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஊட்டி அவர்களை நிர்வகிக்க வேண்டிய பாரிய பொறுப்பு பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு இருக்கின்றது என்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். ஏ. அனஸ் சுட்டிக்காட்டினார்.
கொரோனா அனர்த்தம் தொடர்பாக கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கூட்டம் ஒன்று நேற்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
இது தொடர்பாக செயலாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கையில் இன்று வரை 5222 பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர். இதில் முஸ்லிம்களின் மரண வீதம் 1500 ஐ எட்டி இருக்கிறது என்றால் முஸ்லிம் சமூகம் அவதானமாக இருக்க வேண்டும்.
கிண்ணியா பிரதேசத்தில் இரண்டு சுகாதார பிரிவுகள் இருக்கின்றன. இங்கு சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து அவர்களுடைய பணியாட்கள் குழு இரவுபகலாக கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பள்ளிவாயல் நிர்வாகிகள் அவர்களுக்கு முழுமையான பங்களிப்பினை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் மக்கள் அக்கறை இன்றி இருக்கின்றார்கள். இவர்களுக்கு பள்ளிகள் மூலம் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஒன்றை பள்ளி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் நமக்கு மேலும் பல சவால்கள் காத்திருக்கின்றன. ஓட்டமாவடியில் இன்னும் சுமார் 100 ஜனாஸாக்களைத்தான் அடக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சமூகத்தை வழி நடாத்துகின்ற பள்ளிவாசல் நிர்வாகம் சமூகத்துக்கு விழிப்புணர்வு ஊட்டி மரணங்களை முன்கூட்டியே கட்டுப்படுத்துவதற்கான பங்களிப்பினைச் செய்ய வேண்டும்.
தேவையில்லாத மக்கள் நடமாட்டங்களும் அவசியமற்ற போக்குவரத்துகளும் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் அதிகமாக காணப்படுவதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
கொரோனாவினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மரண வீதமும் இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது. எனவே, தேவை இல்லாத மக்கள் நடமாட்டங்களை குறைப்பதற்கும் பள்ளிவாயல்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.






No comments