ஷரீப் சேர் சமூக உணர்வின் மறுபெயர்
சமூக உணர்வின் மறுபெயர்தான் சரீப் சேர் என்றும் அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் மிகப்பெரும் ஆளுமைதான் சரீப் சேர் என்றும் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் இறைவனடி சேர்ந்த கிண்ணியா மத்திய கல்லூரி முன்னாள் அதிபரும் கிண்ணியா சுமையா அரபுக்கல்லூரி பணிப்பாளரும் பிரபல சமூக சேவையாளருமான எஸ்.எச்.எம். சரிப் அவர்களின் மரணம் குறித்து ஜம்மியத்துல் உலமா சபை விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அனைவரோடும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொள்வதோடு பிறரைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாகவும் இருந்தவர். அன்னார் பண்பாடுகளின் இருப்பிடமாக வாழ்ந்து காட்டிய பெருந்தகை என்று கூடச் சொன்னால் மிகையாகாது.
எப்போதும் கல்வியென்பது பண்பாடுகளில் ஏற்படும் மாற்றமே என்ற கருத்தை ஆழமாக தன் உரைகளில் வலியுறுத்தி அதன் படியே வாழ்ந்தும் காட்டியவர்.
பாடசாலையில் பண்பாடு ரீதியாக முதிர்ச்சியடைந்த ஆசிரியராக, முன்மாதிரி மிக்க அதிபராக திகழ்ந்தவர். பல வருடங்கள் விடுமுறையேதும் எடுக்காது பாடசாலையில் கல்விச் சேவையாற்றியவர்.
பல்வேறு துறைகளில் தடம் பதித்த அவர் மார்க்க, ஆன்மீக விடயத்தில் மிகக் கூடுதலான கரிசனையுடன் தன் வாழ்வை கழித்தவர்.
குடும்ப வாழ்வுக்கு எந்தளவு அக்கறை செலுத்தினாரோ அதேயளவு அல்லது அதைவிடக் கூடுதலான அக்கறையை சமூகம் சார்ந்த விடயங்களிலும் அன்னார் செலுத்தியிருப்பதானது அவர் எந்தளவுக்கு இச்சமூகத்தை நேசித்திருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.
ஜம்இய்யதுல் உலமாவின் சகாத் பிரிவின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராகவும் அதனது பொறுப்பாளராகவும் நீண்ட காலம் சேவையாற்றிய அந்தப் பெருந்தகையின் கால்கள் எமது பிரதேசத்தில் படாத இடங்களே இல்லை எனலாம்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் பணிகளை ஏற்றுக் கொண்டு ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயர் சுவனத்தை வழங்குவானாக. அவரின் பிரிவால் துயரில் இருக்கும் உறவுகளுக்கு பொறுமையை வழங்குவானாக என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments