கிண்ணியா மக்களுக்காக ஜனாஸா வாகனம்
கிண்ணியா மக்களுக்காக பெறப்பட்ட ஜனாஸா வாகனம் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று(23) இரவு கிண்ணியா உலமா சபை காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிண்ணியா பிரதேசத்திற்கு நீண்டநாள் தேவையாக இருந்த ஜனாஸா வாகனம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருப்பதாக கிண்ணியா உலமா சபை தலைவர் மௌலவி
ஏ. எம். ஹிதாயத்துல்லா தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிண்ணியா மக்களின் நலனுக்காக ஜனாசா வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு கிண்ணியா உலமா சபை பொதுமக்கள், அரச ஊழியர்கள் மற்றும் தனவந்தர்கள் ஆகியோர் இடத்தில் பல்வேறு கட்டங்களாக உதவியை கோரியிருந்தது.
இந்த நிலையில், இதற்கான உதவியை அவர்கள் வழங்கி வருவதாகவும், பெரும்பாலும் வாகனத்தை கொள்வனவு செய்யக்கூடிய நிதியை பெறக்கூடிய கட்டத்துக்கு இருப்பதாகவும் அவர், தெரிவித்தார்.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த
தொழிலதிபரான எம்.எஸ். உவைஸ் தனது சொந்த நிதியிலிருந்து அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்றை கடந்த வாரம் கொள்வனவு செய்து இருக்கின்றார்.
உலமா சபை ஜனாஸா வாகனத்தை கொள்வனவு செய்ய முயற்சி செய்கிறது என்பதற்காக நான் இவ்வாறு வாகனம் கொள்வனவு செய்யவில்லை. எனது சொந்த நிதியில் இருந்து கிண்ணியா மக்களுக்கு இவ்வாறானதொரு வாகனம் ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையின் காரணமாகவே இதை நான் இன்று கொள்வனவு செய்து இருக்கிறேன் என இதன்போது எம்.எஸ். உவைஸ் கருத்து தெரிவித்தார்.
உலமா சபையினர் வாகனம் கொள்வனவு செய்ய எடுத்த முயற்சியானது மிகச் சிறந்த பணியாகும். அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நான் மத ஸ்தாபனங்களுக்கும் கல்விக்கூடங்களுக்கு பல்வேறு சேவைகளை செய்திருக்கின்றேன். எதிர் காலத்திலும் பல்வேறு சேவைகளை செய்வதற்கு காத்துக்கொண்டிருக்கிறேன். நிச்சயமாக உலமா சபை என்னிடம் முன்வைக்கின்ற கோரிக்கைகள் அனைத்தையும் என்னால் இயன்ற அளவு நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் இறுதியில், உலமா சபை வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு பெற்ற உதவிகளை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது
இந்த நிலையில், இரு ஜனாசா வாகனங்கள் கிண்ணியா மக்களுக்கு கிடைப்பது உறுதியானது.
ஆனால், தனவந்தரால் பெறப்பட்ட வாகனத்தை, உலமா சபை பொறுப்பு ஏற்றுக் கொள்வதா? அல்லது அவருடைய பொறுப்பில் இருந்து அதை சமூகத்திற்கு பயன்படுத்துவதா? அதை உலமா சபை பொறுப்பேற்றுக் கொண்டால், அதனுடைய பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது போன்றவை தொடர்பாக தீர்மானங்களை இன்னும் சில தினங்களில் முடிவு செய்வதற்கு அந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.





No comments