குறிஞ்சாக்கேணியில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது!
(கியாஸ் ஷாபி)
குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (19.01.2021) 22 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா அன்டிஜென் பரிசோதனையில் இருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர் என குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் A.M.M.அஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்றைய பரிசோதனைக்கு கிண்ணியா சுகாதாரப் பிரிவில் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றவர்களின் முதன் நிலை தொடர்பாளர்கள் இனங்காணப்பட்டு, அவர்களை உட்படுத்தியிருந்தோம்.
இதில் கணவனுக்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று (18) இதே வீதியில், தந்தைக்கும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவர்கள், கிண்ணியா சுகாதாரப் பிரிவின், பெரிய கிண்ணியா கிராம சேவகர் பிரிவில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களின் முதன் நிலை தொடர்பாளர்களாகும் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இவர்களோடு நெருங்கிய தொடர்பாளர்களாக இருந்தவர்களை இனங்கண்டு, தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
இதேவேளை, குறிஞ்சாக்கேணியின் ஏனைய பிரதேசங்களில் எழு மாறாக தெரிவு செய்யப்படுகின்ற வியாபாரிகள், சாரதிகள், அங்காடி வியாபாரிகள், பிரயாணிகள் ஆகியோர்களுக்கும் அன்டிஜென் பரிசோதனையை ஒவ்வொரு நாளும் செய்து வருகின்றோம்.
இதேவேளை, 16 பேரின் இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்காக நேற்று (18) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.இதன் பெறுபேறுகள் நாளை (20) மாலை கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்த அவர்,
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த, 2 வது கொரோனா அலைக்குப் பின்னர் இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள அதேவேளை, கிண்ணியா சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த மூவர் எமது பிரதேசத்தில் வைத்து இனங்காணப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்.







No comments