பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கில் பெண் தொழில் முயற்சியாளர்களுடைய உணவகம் மற்றும் தோல் உற்பத்திப்பொருள் நிலையம் என்பன நேற்று (12) திறந்துவைக்கப்பட்டது.
வடமாகாணத்திலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் கிரிசலிஸ் நிறுவனம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு, கள்ளப்பாடு வடக்கு பகுதியிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உணவகம் மற்று தோல் உற்பத்தி பொருள் நிலையம் என்பவற்றினை அமைப்பதற்குரிய நிதி உதவிகளை கிரிசலிஸ் நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் இவ்வாறு நிறுவப்பட்ட குறித்த கட்டடங்களே இன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளன.
கள்ளப்பாடு வடக்கு கிராம அலுவலரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்வேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல் என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து குறித்த கட்டடங்கள் அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டதுடன், கட்டடத்தின் பெயர்ப் பலகையும் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.
பெண் முயற்சியாளர்களுக்குரிய உணவகத்திற்கான கட்டடத்தினை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களும், தோல் உற்பத்திப்பொருள் நிலையத்திற்கான கட்டடத்தினை கரைதுறைப்பற்று பிரதேசெயலர் ம.உமாமகள் அவர்களும் திறந்துவைத்தனர். அதேவேளை கட்டடத்தின் பெயர்ப்பலகையினை கிரிசலிஸ் நிறுவனத்தின் உத்தியோகத்தர் திரைநீக்கம் செய்துவைத்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் ம.உமாமகள், கிரிசலிஸ் நிறுவன திட்ட முகாமையாளர் எஸ்.தேவதாஸ், உத்தியோகத்தர்கள், மாவட்டசெயலக தொழில்துறை திணைக்கள உத்தியோகத்தர், கிராம சேவகர், கிராமமட்ட பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.(News time tamil)






No comments