அலிகார் மகா வித்தியாலய பெற்றோர்கள் அச்சமடைய தேவையில்லை.
(கியாஸ் ஷாபி)
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் இருந்ததனால் இந்தப் பாடசாலையில் ஏனைய மாணவர்களுக்கு கொரோனா தொற்றக்கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை. எனவே இது குறித்து பெற்றோர்கள் வீணாக அச்சம் அடைய தேவையில்லை என குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். ஏ. அஜீத் தெரிவித்தார்.
கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயின்ற மாணவி ஒருவருக்கு கொரானா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இது சம்பந்தமாக குறித்த பாடசாலை ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த மாணவி கல்வி கற்ற வகுப்பறையில் உள்ள ஏனைய 15 மாணவர்களுக்கும் இன்று பாடசாலைக்குச் சென்று அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட போது, எவருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை. இதன் மூலம் ஏனைய மாணவர்களுக்கு தொற்று இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் முழுமையாக ஊகிக்க முடியாது. இன்னும் சில தினங்களில், அந்த மாணவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் போதே அவற்றை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
எனினும் தற்போதை சூழ்நிலையில், இந்த வகுப்பு மாதிரி, ஏனைய வகுப்புக்களிலும் சுகாதார வழி முறைகளைப் பேணி, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம் பெற்றால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.






No comments