நல்லாட்சி அரசாங்கம் பாதுகாப்பை வழங்கவில்லை
நல்லாட்சி அரசாங்கம் பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக மக்கள் மத்தியில் அச்ச உணர்வையே ஏற்படுத்தியது - நிமல் காமினி
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் சுப நேரம் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையில், மூதூர் தொகுதியில், துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று (3) கிண்ணியாவில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் ஆரம்பமானது.
மூதூர் தொகுதியின் பொதுசன பெரமுன இணைப்பாளர் இப்றாஹீம் சதாதின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூதூர் தொகுதியின் பொதுசன பெரமுன அமைப்பாளர் நிமல் காமினி கருத்து தெரிவிக்கும் போது,
இந்த நாட்டில் சென்ற காலங்களில் இன ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டிருந்தது. ஒரு பஸ்ஸில் பயணம் செய்யும்போது தமிழ் சகோதரர் ஒருவருக்கு அருகில் இருந்து பயணம் செய்வதற்கு முஸ்லிம்களும் சிங்களவர்களும் தயக்கம் கொண்டிருந்தனர்.
அதேபோன்று சஹ்ரானின் தற்கொலைக்குப் பின்னர் ஒரு முஸ்லிமின் பக்கத்திலிருந்து பயணம் செய்வதற்கு தமிழர்களும் சிங்களவர்களும் தயக்கம் கொண்டிருந்தனர். இதற்கு காரணம் குண்டு வெடிக்கும் என்ற அச்சமே.
ஆனால், ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சியின் கீழ், அந்த நிலமை தற்போது ஒட்டுமொத்தமாக இல்லாமலாக்கி, மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த நல்லாட்சி ஆட்சியில்தான் சஹ்ரான் குண்டுத் தாக்குதலை நடாத்தினார். இந்த நாட்டு மக்களுக்கு கடந்த அரசாங்கம் பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக அச்ச உணர்வை ஏற்படுத்தியது.
அத்தோடு அப்பாவி முஸ்லிம்கள் பலரை கைது செய்தார்கள்.ஆனால் இந்த அரசாங்கம் துல்லியமாக செயல்படுகின்றது. உண்மையாக சஹ்ரானோடு தொடர்புள்ளவர்கள் மாத்திரமே கைது செய்யப்படுகின்றார்கள் என்று தெரிவித்தார்.
அவர், தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் நாடு முழுவதும் முதற்கட்டமாக உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவும் 20 லட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றது. மூதூர் தொகுதியில் உள்ள 84 கிராம சேவகர் பிரிவும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்டங்கட்டமாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை கிராம சேவகர் பிரிவின் ஊடாக அரசாங்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற எம்.பி ஒருவரும் 20ஆவது திருத்தத்துக்கு கையை உயர்த்தி அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அமைச்சுப் பதவியை அவர் கேட்டும் கொடுக்கப்படவில்லை.
ஆகவே நீங்கள் வாக்களித்தவர்கள் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார் என்றால், வாக்காளர்கள் ஏன் பொதுசன பெரமுன கட்சியோடு நேரடியாக சேர்ந்து, அபிவிருத்தி திட்டங்களையும் சலுகைகளை அனுபவிக்க முடியாது என கேள்வி எழுப்பினார்.









No comments