Breaking News

நாம் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியப் போவதில்லை.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களினால் இளையோரை ஊக்குவிக்கும் முகமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அவருடைய இல்லத்தில் நேற்று(26)  நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கும் போது. நாம் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கியே தொடர்ந்து பயணிப்போமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் அனைத்து மக்களுக்கும் இன, மத பேதமின்றி சகல விதமான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே தந்தை செல்வா 1949ஆம் ஆண்டு கட்சியை ஆரம்பித்தார்.

நாங்களும் அவரது கொள்கைகளுக்கமையவே கடந்த 70 வருடங்களாக பயணித்து வருகின்றோம். அதிகளவான கட்சிகள் அவரது நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளன.

அந்தவகையில் நாமும் அவைகளை அடையக்கூடிய நிலையிலேயே தற்போது இருக்கின்றோம். சில பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து இருக்கின்றோம்.

எதிர்வரும் காலங்களிலும் எங்களது இலக்கில் இருந்து விலகாமல், சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிப்பதன் ஊடாக மாத்திரமே நாம் வெற்றியடைய முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments