Breaking News





( கியாஸ் ஷாபி )

மாவட்டத்தின் சில பகுதிகள் தொடர்ந்து உயர் ஆபத்தான வலயங்களாக பிரகடனம்! 

மாவட்டத்தில் 7 நாட்களுக்குள் 13 கொரோனா மரணங்கள்!

மாவட்டத்தில் மே மாதத்தில் மாத்திரம் 78 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்!

கிண்ணியாவில் 21 நாட்களில் 25 மரணங்கள்!

மாவட்டத்தில் தொற்றும் மரணமும் அதிகரித்துச் செல்வதற்கான காரணம் என்ன?

கந்தளாய் வைத்தியசாலை தொடர்பான போலிக் கதைகள்!

மாவட்டத்தில் மே மாதம் வரை  3425 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்!

மாவட்டத்தில் மே மாதம் வரை 2732 பேர் குணமடைந்துள்ளனர்!

நாட்டில் ஏற்பட்ட 3 வது கொரோனா அலை காரணமாக கிழக்கில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக திருகோணமலை விளங்குகின்றது.

இம் மாவட்டத்தில் 3வது அலையில் இருந்து இன்று (31, 05. 2021) வரை 3425 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருப்பதாகவும் அதில் 42 கர்ப்பிணி தாய்மார்களும் உள்ளடங்கியிருப்பதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 3வது அலையில் இருந்து இன்று (2021.05.31) வரை 87 கொரோனா மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதில் 2021 மே மாதத்தில் மாத்திரம் 78 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த இரு அலைகளைவிட, இந்த மூன்றாவது அலையில் மரண விகிதம் படிப்படியாக அதிகரித்துவருவதை
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

திருமலையில் உயர் ஆபத்தான வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை?

மூன்றாவது அலையில் இருந்து இன்று (2021.05.31) வரை திருகோணமலை மாவட்டத்தில் 3425 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் 87 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இன்று வரை 2732 பேர் குணமடைந்துள்ளனர். 631 பேர் தற்போது வைத்தியசாலைைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 15146 பேர் PCR பரிசோதனைக்கும் 23030 பேர் RAT பரிசோதனைக்கும் 2021 மே 31 வரை உட்படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த கடந்த ஏழு நாட்களில் (2021.05.25 - 2021.05.31) வரை 575 பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். அத்தோடு இந்த காலப்பகுதிக்குள் 13 கொரோனா மரணங்களும் ஏற்பட்டுள்ளன. மேலும் கடந்த 7 நாட்களுக்குள் 2665 சிகிச்சை பெற்று குணம் அடைந்திருக்கின்ற அதேவேளை, 642 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி திருமலை மாவட்டம் ஆபத்தான நிலையிலிருப்பதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இதன் காரணமாக 3வது அலையின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் உயர் ஆபத்தான வலயம் என சில சுகாதாரப் பிரிவுகளை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஒவ்வொரு வாரமும் பிரகடனம் செய்து வருகின்றது.

இந்த வாரம் திருகோணமலை (150), கிண்ணியா (88), மூதூர் (60), குச்சவெளி (77), கந்தளாய் ( 58), குறிஞ்சாக்கேணி (55) ஆகிய ஆறு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் உயர் ஆபத்தான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறன.

கொரோனாவினால் பலியானோர் விபரம்.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ரீதியாக இறந்தவர்களின் தொகையை அவதானிக்கும் போது, 2021.05.31 நள்ளிரவு 12.00 மணி வரை கிண்ணியா - 26, திருகோணமலை - 15, உப்புவெளி - 16, குறிஞ்சாக்கேணி - 11, மூதூர் - 09, கந்தளாய் - 04, குச்சவெளி - 03, தம்பலகாமம் - 03 என்றவாறு அமைந்திருக்கின்றது.

கிண்ணியாவில் 21 நாட்களில் 25 மரணங்கள்.

கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மே மாதம் 31 ஆம் திகதி வரை 26 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட 2 வது கொரோனா அலையின் மூலம் ஒருவரும் 3 வது கொரோனா அலையின் மூலம் (2021.05.11 - 31.05.2021) வரையுமான 21 நாட்களில் 25 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளனர்.

இதில் 15 ஆண்களும் 10 பெண்களும் அடங்குகின்றனர். இந்த இறப்பு வீதமானது தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கிண்ணியாவில் ஒரு அதிபர் (52), ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் (80) ஒருவர், உட்பட 16 ஆண்களும் 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா சுகாதாரப் பிரிவிலே ஆகக்கூடிய கொரோனா இறப்பு வீதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரதேசத்தில் 3வது அலையில் இருந்து இன்று (2021 மே 31) வரை 243 பேர் கொவிட் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் (2021 மே) கிண்ணியா சுகாதாரப் பிரிவில் 253 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

குறிஞ்சாக்கேணி சுகாதாரப் பிரிவின் நிலை ?

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள குறிஞ்சாக்கேணி பிரிவிலும் இதே காலப்பகுதிக்குள் 11 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இங்கு 41 வயதான இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் உட்பட 37, 42,61,52,56, 63, 65, 66, 70, 22 மற்றும் 74 ஆகிய வயதை உடைய யோர் மரணமானார்கள்
இதில் 9 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவர்.

இங்கும் தொற்றாளர் எண்ணிகை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கடந்த மாதத்தில் மாத்திரம் (2021 மே) குறிஞ்சாக்கேணி சுகாதாரப் பிரிவில் 147 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதில் 2வது அலையில் 29 பேரும் 3வது அலைையில் 176 பேரும் அடங்குகின்றனர் என்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ. அஜீத் தெரிவித்தார்.

தொற்றா நோயினால் மரணிப்போர் வீதம் திடீர் அதிகரிப்பு!

இந்த சமகாலத்தில் வயது மூப்பு மற்றும் தொற்றா நோய் காரணமாகவும் கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி பகுதிகளில் ஒரு நாளைக்கு 4 , 5 என அடிக்கடி மரணங்கள் நிகழ்கின்றன. இந்த சூழமைவு மேலும் ஒரு விதமான அச்சத்தையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு வீட்டில் மரணமான உடல்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இரு பிரிவுகளிலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டு இருப்பதால், இரத்த உறவுகளோ, அயலவர்களோ உதவிக்குச் செல முடியாத ஒரு இக்கட்டான நிலைமை.

இந்த நிலைமைக்கு மத்தியிலும் கிண்ணியா வைத்தியசாலையிலோ குளிரூட்டி பிரேத அறையில் இரு உடல்களைத்தான் வைக்க முடியுமான கஸ்ட கால நிலை! இதனால் மேலதிக உடல்களை நாட்கணக்கில் வெளியில் வைக்கப்படுகின்ற அவல நிலை!

இவ்வளது துன்பத்துக்கு மத்தியிலும் முதலில் உடல்களுக்கு அன்டிஜென் பரிசோதனை செய்யப்படுகின்றது. அதில் நெகடிவ் என்றால், PCR பரிசோதனைக்கு இறந்தவரின் மாதிரி திருமலை வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகின்றது. இதன் பெறுபேறு வருவதற்கு 12 மணித்தியாலங்களுக்கு மேலாகின்றது. இது மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்து போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துன்பத்துக்கு மேல் துன்பத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. கிண்ணியா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யக் கோரி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மக்கள் போராட்டங்களை நடாத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கண்ட பலன் பூச்சியமே!

இவ் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே கிடைத்திருந்தது.

அப்போது கிண்ணியாவில் 3 பாராளமன்ற உறுப்பினர்கள்! அதுவும் ஆளும் கட்சி! போதாக்குறைக்கு மத்தியிலும் மாகாணத்திலும் சுகாதார அமைச்சு அதிகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முதல்வர்கள்!ஆனால் நடந்தது என்ன?

கட்சி அரசியலுக்காவும் தனிநபர் அரசியலுக்காகவும் ஒரு இலட்சம் மக்கள் வைத்திய வசதி இன்றி அநாதரவாக்கப்பட்ட வரலாறு வேறு. (இதனை மற்றுமோர் கட்டுரையில் தனியாக ஆராய்வோம்)

மூதூரின் நிலைமை என்ன?

மூதூர் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால், 3வது அலைக்குப் பின்னர் இங்கு பட்டதாரி பயிலுநராக அண்மையில் நியமனம் பெற்ற 43 வயதான 4 பிள்ளைகளின் தந்தை உட்பட 9 பேரை கொவிட் பலி எடுத்திருக்கின்றது.

இங்கும் தொற்றாளர் எண்ணிகை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கடந்த மாதத்தில் மாத்திரம் (2021 மே) மூதூர் சுகாதாரப் பிரிவில் 229 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இங்கு மொத்தமாக 351 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் இதில் 2வது அலையில் 79 பேரும் 3வது அலைையில் 272 பேரும் அடங்குவதாகவும் மாகாண சுகாதார சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தப் பகுதியில் உள்ள தோப்பூர் பிரதேசம் ஆபத்தான பகுதியாக மாறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு மூன்றாம் அலையில் இதுவரை 117 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 8 நாட்களில் மட்டும் 82 தொற்றாளர்கள் இனம் காணப்படுள்ளமை இப்பகுதியில் தொற்று வேகமாக பரவி வருகிறது என்பதைக் காட்டுகிறது.

திருகோணமலை மற்றும் உப்புவெளி பிரதேசங்களின் நிலைமை?

திருகோணமலை சுகாதாரப் பிரிவில் 3வது அலைக்குப் பின்னர் 15 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் ஒருவரும் பலியானார்.

இங்கும் தொற்றாளர்களின் எண்ணிக்க எண்ணிகை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கடந்த மாதத்தில் மாத்திரம் (2021 மே) திருகோணமலை சுகாதாரப் பிரிவில் 486 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரிவில் மொத்தமாக 1108 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 3வது அலையில் 683 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதேபோன்று உப்புவெளி சுகாதாரப் பிரிவில் 3வது அலைக்குப் பின்னர் 16 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவும் கடந்த ஒரு மாத காலத்துக்குள் இடம்பெற்றிருப்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

இங்கும் தொற்றாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கடந்த மாதத்தில் மாத்திரம் (2021 மே) உப்புவெளி சுகாதாரப் பிரிவில் 300 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்தப் பிரிவில் மொத்தமாக 665 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 3வது அலையில் 469 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குச்சவெளி மற்றும் தம்பலகாம் பிரதேசங்களின் நிலைமை?

குச்சவெளி சுகாதாரப் பிரிவில் 3வது அலைக்குப் பின்னர் 03 மரணங்கள் நிகழ்ந்துள்ள.

இங்கும் தொற்றாளர்களின் எண்ணிக்க தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கடந்த மாதத்தில் மாத்திரம் (2021 மே) குச்சவெளி சுகாதாரப் பிரிவில் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரிவில் மொத்தமாக 209 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 2வது அலையில் 30 பேரும் 3வது அலையில் 179 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்து தம்பலகாமம் சுகாதாரப் பிரிவில் 3வது அலைக்குப் பின்னர் 03 மரணங்கள் நிகழ்ந்துள்ள.

இங்கும் தொற்றாளர்களின் எண்ணிகை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கடந்த மாதத்தில் மாத்திரம் (2021 மே) தம்பலகாம் சுகாதாரப் பிரிவில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரிவில் மொத்தமாக 121 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 2வது அலையில் 21 பேரும் 3வது அலையில் 100 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கந்தளாயும் பாதிப்பு குறைந்த ஏனைய சுகாதாரப் பிரிவுகளும்

கந்தளாய் சுகாதாரப் பிரிவில் 3வது அலைக்குப் பின்னர் 04 மரணங்கள் நிகழ்ந்துள்ள.

இங்கும் தொற்றாளர்களின் எண்ணிக்க எண்ணிகை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கடந்த மாதத்தில் மாத்திரம் (2021 மே) கந்தளாய் சுகாதாரப் பிரிவில் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரிவில் மொத்தமாக 208 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 2வது அலையில் 37 பேரும் 3வது அலையில் 171 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கோமரங்கடவல சுகாதாரப் பிரிவில் கடந்த மாதத்தில் (2021 மே) 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரிவில் மொத்தமாக 55 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 2வது அலையில் 12 பேரும் 3வது அலையில் 43 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்து பதவிசிரிபுர சுகாதாரப் பிரிவில் கடந்த மாதத்தில் (2021 மே) 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரிவில் மொத்தமாக 27 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 2வது அலையில் 4 பேரும் 3வது அலையில் 23 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சேருவில சுகாதாரப் பிரிவை எடுத்துக் கொண்டால் அங்கு, கடந்த மாதத்தில் (2021 மே) 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரிவில் மொத்தமாக 31 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 2வது அலையில் 16 பேரும் 3வது அலையில் 15 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அடுத்து ஈச்சலம்பற்று சுகாதாரப் பிரிவில் கடந்த மாதத்தில் (2021 மே) 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரிவில் மொத்தமாக பேர் 5 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 2வது அலையில் பாதிப்பு ஏதும் இல்லை. 3வது அலையிலே இந்த 5 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

கந்தளாய் வைத்தியசாலை தொடர்பான போலிக் கதைகள்

இந்த மாவட்டத்தில் குச்சவெளி , ஈச்சலம்பற்று, கோமரங்கடவெல , கந்தளாய் ஆகிய வைத்தியசாலைகள் கொரோன சிகிச்சை நிலையங்களாக இயங்குகின்றன. இதில் கந்தளாய் வைத்தியசாலை பெரும்பான்மை சமூகத்தவரின் மத்தியில் இருக்கின்ற ஒரு வைத்தியசாலையாகும்.


கந்தளாய் வைத்தியசாலையில் வசதிகள் அதிகம் என்பதால், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து நோயாளிகள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் அந்த வைத்தியசாலை மீது, போலியான கதைகளை உருவாக்கி, பெரும்பான்மைச் சமூகம் தொடர்பாக இன முரண்பாட்டு மனநிலை ஒன்றை தமிழ், முஸ்லிம் சமூகங்ளுக்கிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு சமூக வலைத்தளங்களில் " கந்தளாய்க்கு அனுப்பப்படுகின்றவர்கள் சடலமாக திரும்பி அனுப்பப்படுகிறார்கள்" என்ற கருத்தில் சமூக வலைத்தளங்களில் சில பதிவுகள் இடப்பட்டிருந்ததை கடந்த வாரம் அவதானிக்க முடிந்தது.

மக்கள் சொல்லொனா துயரங்களை தினம் தினம் சந்தித்து கொண்டிருக்கின்ற இந்த அனர்த்த நிலையில், இப்படிப்பட்ட போலிச் செய்திகளை உண்மையான மனித நேயம் உள்ளவர்கள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள் என அங்கு சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பிய அனைவரும் கூறுகின்றனர்.

இது குறித்து 14 நாட்கள் இந்த வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பிய, கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த சிரேஸ்ட ஆசிரியரான கயாத்து முகம்மது நவாஸ் (57) கருத்து கேட்டபோது, அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

காய்ச்சல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான், அங்கிருந்து 3 நாட்களுக்குப் பின்னர் எனக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. உடனடியாக கந்தளாய் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டேன்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த எட்டாவது நாளில், நான் முகநூலில் இவ்வாறான பதிவொன்றை பார்த்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.

அங்கு கடமையாற்றுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் ஊழியர்களும் மனிதாபிமானத்தோடு பணி செய்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொருவருடைய மனநிலையும் உயிருக்காகப் போராடுபவர்களை காப்பாற்றுவதாகவே இருக்கின்றது.

இதை ஒரு அசாதாரண சூழ்நிலையாகக் கருதி தங்களது வழமையான பணியை விட, இரவு பகலாக பல்வேறு தியாகங்களைச் செய்து நோயாளிகளுக்கு பணிவிடை செய்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், நோயாளிகளின் சிறுநீர் கழிவுகளை மாற்றி, புதிய கழிவு பைகளை அணிவித்து விடுவதை நேரடியகக் கண்டு, நான் மெய்சிலிர்த்து போனேன். இங்கு அவர்கள் இனம் என்று பார்க்கவில்லை, நோயாளி என்றே பார்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்கள் குணமடைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

காய்ச்சல் வந்து, பல நாட்கள் வீட்டில் இருந்து விட்டு, கடைசி நேரத்தில் இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் அநேகமாக உயிரிழக்கிறார்கள். இது யாருடைய தவறு? முழுக்க முழுக்க தவறை நமது பக்கம் வைத்துக் கொண்டு, வைத்தியசாலை மீது இனவாதக் கண்கொண்டு கட்டுக்கதைகளை அவிழ்த்து அவதூறு கூறுவதை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மக்களே! பயப்படாதீர்கள். காய்ச்சல் வந்தால், ஆரம்பத்திலேயே கந்தளாய் வைத்தியசாலைக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுக்கு தாராளமாக பணிபுரிய பெரும்பான்மைச் சமூகம் காத்திருக்கிறார்கள்.

இந்த நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை. அது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை போலிச் செய்திகளால் சாகடித்து விடாதீர்கள்" என்று தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் 
தொற்று அதிகரித்துச் செல்வதற்கான காரணம் என்ன?

இது குறித்து கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஸ்வியிடம் வினவியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொற்று தொடர்ந்து அதிகரித்துச் செல்வதற்கு பின்வரும் காரணங்கள் வழிகோலுகின்றன.

1. சுகாதார துறையினர் கூறுகின்ற வழிமுறைகளை மக்கள் சரியாக கவனம் எடுத்து பின்பற்றாமை.

2.கொவிட் 19 ஒரு சாதாரண தொற்று என மக்கள் ஊகித்து கொண்டமை.

3.இவ்வாறான தொற்று ஒன்று இருப்பது என்ற தகவல் ஒரு கட்டுக்கதை என்று நம்புதல்.

4.அயலவர்கள் உறவினர்களை சந்திக்க செல்லும் போதும், குறிப்பாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களை பார்வையிடச் செல்வதனாலும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கின்றது.

அடுத்து இறப்பு வீதம் தொடர்ந்து அதிகரித்துச் செல்வதற்கு

1. வயோதிபர்கள் இருக்கின்ற வீடுகளில் சரியான சுகாதார முறைகள் கடைபிடிக்கப்படாமை.
ஏனென்றால், வீட்டில் வயோதிபர்கள் தொற்றா நோய் உள்ளவர்கள் இருப்பார்கள். அந்த இடத்தில் அவர்களோடு பழகுகின்ற ஏனையவர்கள், முற்றிலும் சுகாதார சில வழிமுறைகளை பின்பற்றி இருந்தால், கொரோனா நோய் தொற்று உள்ளவர்களிடமிருந்து இந்த தொற்று பரவாமல் தடுத்து மரண வீதத்தை குறைக்க முடியும்.
இந்த நிலைமை தவறியமைதான் வீட்டில் இறப்பு அதிகரித்திருக்கின்றது.

2. நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் காலம் தாமதித்து வைத்தியசாலைக்குச் செல்வது அல்லது உறவினர்கள் எந்த பொறுப்புணர்வும் கவனமுமின்றி அவர்களை தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பதும் இறப்பு வீதம் அதிகரித்துச் செல்வதற்கான காரணங்களாகும்.

மேற்கூறிய விடயங்கள் விஞ்ஞனை நீதியான பொறிமுறையினூடாக எமது பிரதேசத்தில் சுகாதாரப் பிரிவினரால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

எனவே, திருகோணமலை மாவட்டத்தை ஆக்கிரமித்துள்ள கொரோனா தொற்றுக்கு மத்தியில் சுகாதாரப் பிரிவினரும், நிர்வாகப் பிரிவினரும் முப்படைையினரும் உயிரைப் பணயம் வைத்து, பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இரவு பகலாக தங்கள் கடமைகளைச் செய்து வருகின்றனர். கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபையால் அனர்த்த நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பது கிண்ணியா பிரதேசத்தின் முன் மாதிரியை பறைசாட்டுவதாக அமைந்துள்ளது. இந்த விடயங்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு ஓரளவேனும் ஆறுதலையும் மன அமைதியையும் அளித்துக் கொண்டிருக்கின்றது. (முற்றும்)






No comments