ஐஸ் மஞ்சுவின் கைத்துப்பாக்கியுடன் அவரது தம்பி கைது
புலிகளின் புலனாய்வு பிரிவுடன் செயற்பட்ட ஐஸ் மஞ்சுவின் கைத்துப்பாக்கியுடன் அவரது தம்பி கைது
(கியாஸ் ஷாபி)
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை நகர் பகுதி என்.சீ.வீதியில் கடந்த 10.02.2021 திகதி மாலை 6.30 மணியளவில் நகை கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், ஆறு நபர்களை கைதுசெய்ததாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிஸார் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, புல்மோட்டை பிரதேசத்தில் மூவரும் மொரவேவ பிரதேசத்தில் ஒருவரும், சமுத்திராகம பிரதேசத்தில் ஒருவரும், சீனன்குடா பிரதேசத்தில் ஒருவருமாக ஆறு நபர்கள் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 35 பவுன் நகைகளில் 17 பவுன் நகைகள் கொள்ளையர்களால் புத்தளம் மாவட்டம் கற்பிட்டி, மாரவில பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் நகைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பொலிஸார் கூறுகையில், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரும், கொள்ளை கூட்டத்தின் தலைவராகவும் செயற்பட்ட 34 வயதுடைய ஒரு நபரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் ஆறு தோட்டாக்களுடனான மெகசீன் ஒன்றும் கைகுண்டு ஒன்றும் வாள் கைப்பற்றபட்டது என்றும் தெரிவித்த தலைமையகப் பொலிஸார்,
பிரதான சந்தேக நபர் 2005.10.30 திகதி இராணுவ புலனாய்வு பொறுப்பாளர் கேணல் ரிஸ்வி மீடினை கொழும்பில் வைத்து சுட்டு கொலைசெய்த ஐஸ் மஞ்சு என்பவரின் சகோதரர் ஆவார்.
ஐஸ் மஞ்சுவே தன்னிடம் கைத்துப்பாக்கியை 2008 ஆம் ஆண்டு வழங்கியதாகவும் அந்த கைத்துப்பாக்கியையே தாம் கொள்ளையின் போது பாவித்ததை அவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவான ஐஸ் மஞ்சு தற்போதும் தமது சகோதரருடன் தொடர்புகளை பேணிவருவதாக சந்தேகம் தெரிவித்த பொலிஸார் கேணல் மீடினை சுட பயன்படுத்திய கைத்துப்பாக்கி தற்போது கைப்பற்றப்பட்ட துப்பாக்கியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தி வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட ஆயுதம் மற்றும் நகைகளை நாளை (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்







No comments